மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

திமுக போராட்டத்தில் காங்கிரஸ்: ப.சிதம்பரம்

திமுக போராட்டத்தில் காங்கிரஸ்: ப.சிதம்பரம்

இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ள வேண்டுமென ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 14ஆம் தேதி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனை எதிர்த்து வரும் 20ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

குடும்பத்தினர் உதவியுடன் சிதம்பரம் இன்று (செப்டம்பர் 18) தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள சிதம்பரம், “எல்லா மொழிகளின் வளர்ச்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் இந்தி மட்டுமே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தித் திணிப்பை எதிர்த்து வரும் 20ஆம் தேதி திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon