மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

இந்தியை திணிக்கவில்லை: அமித் ஷா

இந்தியை திணிக்கவில்லை:  அமித் ஷா

இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

“ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை. அதுதான் சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை எந்த மொழியால் இணைக்க முடியுமென்றால், அது இந்திதான்” என உள் துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 14ஆம் தேதி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை உண்டாக்கியது. தமிழகத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். திமுகவின் உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை மறுநாள் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்துள்ளார் உள் துறை அமைச்சர் அமித் ஷா.

ஜார்க்கண்டில் இன்று (செப்டம்பர் 18) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநில மொழிகளுக்கு பதிலாக இந்தியைத் திணிக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை. தாய் மொழிக்குப் பிறகு இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் மட்டும்தான் வைத்தேன். நானே இந்தி பேசாத மாநிலமான குஜராத்திலிருந்து வந்தவன்தான். ஆனால் இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்குகிறார்கள். அது அவர்களின் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான 370ஆவது சட்டப் பிரிவை நீக்கியதால் இரும்பு மனிதர் என்று பாஜகவினரால் அழைக்கப்படும் அமித் ஷா, இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழகத்தின் எதிர்ப்புக்குப் பணிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் திமுகவினர்.

புதன், 18 செப் 2019

அடுத்ததுchevronRight icon