மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: வெள்ளம் வரக்கூடாதென்றால்!

சிறப்புக் கட்டுரை: வெள்ளம் வரக்கூடாதென்றால்!

நரேஷ்

இந்த நிகழ்ச்சிகளை நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். இப்போதெல்லாம் வருடத்துக்கு ஒருமுறை வரும் வெள்ளம், தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் ஒரு கெட்ட கனவாக இருக்கிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் பள்ளத்தாக்குகள் சமீபகாலம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று இம்மாநிலங்கள் கடுமையான வெள்ள அபாயத்தில் சிக்கியிருக்கின்றன.

கேரளாவில் 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின்போது, இரண்டு கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. பல உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. சரியாக ஒரு வருடம் முன்னதாகத்தான், கேரளம் ஒரு நூற்றாண்டின் மிக மோசமான வெள்ளத்தைக் கண்டது. இவ்வாறான வெள்ளப் பேரிடர்கள் மிக மோசமானதாக மாறி வருகின்றன. காலநிலை மாற்றத்தால் ஒழுங்கற்ற பருவநிலை உருவாகி அதீதமான மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தொடர்ச்சியான மழையானது வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. கூடவே, மக்கள்தொகை பெருக்கத்தால், கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் குடியேறி வருகின்றனர். இந்தப் போக்கு மக்களை ஆபத்தான பகுதிகளை நோக்கித் தள்ளுகிறது. மற்றுமொரு முக்கியச் சிக்கல், இந்த மழையை முதன்முதலாக தாங்கும் மலைமுகடுகளான மேற்குத்தொடர்ச்சி மலையின் மரங்கள் முழுவதுமாக மொட்டையடிக்கப்படுவதுதான்.

இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலையானது குஜராத்தில் ஆரம்பித்து தமிழக எல்லைவரை மேற்குக் கடற்கரைக்கு இணையாக 1,600 கி.மீ தூரம் பரவுகிறது. இந்த மலைத்தொடரானது நிசப்தமான நிலப்பரப்புடன், செங்குத்தான பள்ளத்தாக்குகளுடன்கூடிய அழகிய நிலப்பரப்பாகக் காட்சியளிக்கிறது. மலை, மலை முகடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது. அது, இயற்கை மற்றும் மனிதர்களின் தேவைகளை சமநிலைப்படுத்த இந்தியா தனது சுற்றுச்சூழல் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான்.

மலைகளில் பல்லுயிர்ச்சூழல் பரவிக்கிடக்கிறது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அவை உள்ளடக்கியிருந்தாலும், நாட்டில் உள்ள 30 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள், மீன், ஊர்வன வகைகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைதான் தாய்நிலம். இவற்றுள் காட்டு யானைகள் மற்றும் புலிகள் ஆகிய பேருயிரிகளும் அடங்கும். இம்மலைத்தொடரின் தனித்துவத்தையும், அங்கு வாழும் உயிர்களின் வாழ்விட இழப்பையும் கவனத்தில்கொண்டு இம்மலைத்தொடரை பல்லுயிர் பெருக்கத்துக்கான எட்டு உலகளாவிய தனித்துவமான பல்லுயிர்ச்சூழல் பகுதிகளில் ஒன்றாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

காலநிலை மாற்றம் ஏற்கெனவே வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக பருவமல்லாத மழை பொழிவு, கோடையில் கடுமையான வறட்சி, வறண்ட நதிகள் ஆகியவற்றைக் கூறலாம். மேலும், மக்கள்தொகை அதிகரித்துள்ளதால், காடுகளை அழித்துவிட்டு, அதற்குப் பதிலாக மசாலா, டீ, காபி மற்றும் ரப்பர் தயாரிப்புத் தோட்டங்களைக் கட்டமைத்துள்ளனர். கட்டுமானத் தொழிலுக்குக் கற்களையும் மணலையும் உருவாக்க, மலைப்பகுதிகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான சட்டவிரோத கல் குவாரிகளும் இன்றுவரை இயங்கி வருகிறது. இம்மலைத்தொடரில் நிகழும் காடழிப்பு மற்றும் மிகவும் ஆபத்தான வெடிபொருட்களின் பயன்பாடு, நிலஅதிர்வு மற்றும் நிலச்சரிவுகளுக்குக் காரணமாகி விடுகிறது.

முக்கிய நதிகளில் உள்ள பெரிய அணைகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குகின்றன என்றாலும், அவை ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கேரளாவில், பல்வேறு இனக்குழுக்கள் பிரிட்டிஷார் ஆட்சி காலத்திலிருந்தே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். எரிசக்தி தேவை அதிகரிக்கும்போது, அதிகமான அணைகளை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது மிகப்பெரிய நிலப்பரப்பிலான காட்டை அழிப்பதற்கும், அதைச் சார்ந்த சூழல் அழிவுக்கும் வழிவகுக்கும். இவைதாம் வெள்ளத்தை மிகவும் கடுமையானதாக மாற்றுகின்றன. ஏனெனில், ஒரு நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருக்கும் மரங்கள் அழிக்கப்பட்டால், அந்நிலம் நீரைத் தக்கவைக்கும் திறனை இழந்துவிடுகிறது.

பேரிடர் ஏற்படுவதற்கு அணைக்கட்டுகள் உருவாக்கப்படுவது, காடழிப்பு, காலநிலை மாற்றம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தப் பகுதியில் மனிதனால் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளே அதிகம். இவைதாம் வலுவான சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின் தேவையை சுட்டிக்காட்டியுள்ளன.

மேற்குத்தொடர்ச்சி மலையை எப்படிப் பாதுகாப்பது?

இந்தியாவின் 1950 அரசியலமைப்பு சட்டவரைவின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும். இது ஒரு சுத்தமான சூழலுக்கான உரிமையைக் குறிப்பிடவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் சட்டமியற்றலுக்கான சட்ட அதிகாரத்தை வழங்கும் வல்லமை உடையது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக, நம் நாட்டின் மத்திய அரசானது மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்குப் பொருந்தக்கூடிய பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. உதாரணமாக -

1) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986

2) வனப் பாதுகாப்பு சட்டம் 1980

3) பல்லுயிர்ப் பாதுகாப்பு சட்டம் 2002.

எவ்வாறாயினும், இந்தச் சட்டங்கள் திறமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. இவ்வாறான நிலையில்தான், இமயமலை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உயிர்க்கோள இருப்புகளுக்கென தனியாக ‘சிறப்புச் சட்டங்கள்’ தேவையோ என்று எண்ண வைக்கிறது.

கூடுதலாக, இந்தியாவின் நீர் சட்டங்கள் போதுமானதாக இல்லை. தற்போதுள்ள சட்டம், முதன்மையாக மாசு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவதால் அணைகளின் தவறான நிர்வாகம் மற்றும் அதிகப்படியான ஆற்றங்கரை சுரண்டல்கள் வரைமுறை இல்லாமல் அதிகரிக்கிறது. இதன் விளைவாக ஏற்படும் வெள்ளத்தைத் தடுப்பது அல்லது நிர்வகிப்பது பற்றி சட்டத்தில் எந்த தகவலும் இல்லை.

மாநில எல்லைகளைத் தாண்டி ஓடும் ஆறுகளின் விஷயத்தில், மேலதிகமான சிக்கல் ஏற்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட சில பெரிய வெள்ளங்கள் கூர்ந்து நோக்குகையில் ஒரு செய்தி புலப்படுகிறது. ஒரு மாவட்டத்திலோ அல்லது மாநிலத்திலோ முழு கொள்ளளவு கொண்ட அணைகள் திறக்கப்பட்ட பின்னரே இவ்வாறான வெள்ள பாதிப்புகள் நிகழ்ந்தன. சமீபத்தில், இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண `வரைவு அணை பாதுகாப்பு மசோதா’ முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சட்டமியற்றுதல் பற்றிய விவாதங்களில், அடிமட்ட அளவிலான மக்களின் பங்கேற்பு அதிகமாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினையைவிட, வறுமையைப் போக்கும் வருவாய் முக்கியமானதாகிவிடுகிறது. எனவே, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் அவர்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர்கள் நேரடியாக உணரும் வகையில் மக்களின் கருத்து வடிவமைக்கப்பட வேண்டும்.

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரானது தென்னிந்தியாவின் உயிர்நாடி. லட்சக்கணக்கானவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாழ்வாதாரத்துக்காக இம்மலைத்தொடரைச் சார்ந்துள்ளனர். இந்த மலைகளுக்குப் பாதுகாப்பு தேவை. இருப்பினும், இந்தப் பகுதியில் புதிய வளர்ச்சி திட்டங்களானவை இம்மக்களை மையமாகக்கொண்டிருப்பதால், இயற்கை பாதுகாப்பு பற்றிய முழு கவனமும் குறைக்கப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க, இந்த மலைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஓர் அணுகுமுறை தேவை. அதுவும் குறிப்பிட்ட சட்டங்களை உள்ளடக்கிய தீர்க்கமான அணுகுமுறை தேவை. அதுவே இம்மலைத் தொடரை பாதுகாக்கும் செயலின் முதல்படி.

செவ்வாய், 17 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon