மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

டிஜிட்டல் திண்ணை: 2ஜி வழக்கு... மீண்டும் தோண்டும் மத்திய அரசு!

டிஜிட்டல் திண்ணை: 2ஜி வழக்கு... மீண்டும் தோண்டும் மத்திய அரசு!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.

“நீதித் துறை வட்டாரத்தின் ஆச்சர்யகர நிகழ்வாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியின் வசம் நிலுவையில் இருக்கும் 2ஜி தொடர்பான அத்தனை வழக்குகளும், இன்னொரு சிபிஐ நீதிமன்ற நீதிபதியான அஜய் குமார் குஹாரிடம் ஒப்படைக்கப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

செப்டம்பர் 16ஆம் தேதி வெளியான இந்த அறிவிக்கையில், ‘புதுடெல்லி மாவட்ட, செஷன்ஸ் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான ஓ.பி.சைனியின் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 2ஜி தொடர்பான வழக்குகள் அத்தனையும், வரும் 1-10-2019 முதல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான அஜய்குமார் குஹார் வசம் ஒப்படைக்கப்படுகிறது’ என்று டெல்லி உயர் நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார். நீதிபதி ஓ.பி.சைனி இந்த மாதத்தோடு பணி ஓய்வு பெறும் நிலையில், இந்த அறிவிப்பாணையை சாதாரண நீதிமன்ற நிர்வாக நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் டெல்லி வழக்கறிஞர்கள்.

பாஜக ஆட்சியில்தான், இந்த வழக்கு இன்ன நீதிபதியிடம் ஒப்படைக்கப்படுகிறது என்பதற்கான பின்னணி பற்றி நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் ஓ.பி.சைனியிடம் இருந்த அத்தனை 2ஜி வழக்குகளும் சிதம்பரம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆகஸ்ட் 21 முதல் 15 நாட்கள் சிபிஐ கஸ்டடியில் இருந்த ப.சிதம்பரம் மீண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான குஹார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘சிதம்பரம் சக்தி வாய்ந்த நபர் என்பதால் ஆதாரங்களை அழிக்கக்கூடும். எனவே, அவரை வெளியே விடக் கூடாது. அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும்’ என்று வாதிட்டார். திகார் சிறையில் அடைபடுவதைத் தவிர்க்கும் நோக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையிடம் ஆஜராகத் தயார் என்று சிதம்பரம் தரப்பில் நீதிபதி குஹாரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வழக்கறிஞர் கபில் சிபல், ‘போலீஸ் காவல் முடிந்தால் நீதிமன்றக் காவல் என்பது அவசியமானது என சட்டத்தில் எந்தக் கொள்கையும் இல்லை. ஆதாரங்களே இல்லாத நிலையில் சிதம்பரம் ஆதாரத்தை அழித்துவிடுவார்’ என்ற சிபிஐ வாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை அரை மணி நேரத்துக்குப் பின்னர் வழங்குவதாகத் தெரிவித்தார். பின்னர் 5 மணியளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குஹார், செப்டம்பர் 19ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிதம்பரத்தை வைக்க உத்தரவிட்டார். இதன்மூலம் சிதம்பரம் திகார் சிறையில் வரும் 19ஆம் தேதி வரை அடைக்கப்பட்டிருக்கிறார்.

அதே நாளில் ஓ.பி.சைனி ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கும், கார்த்திக்கிக்கும் முன்ஜாமீன் வழங்குகிறார். இவ்வழக்கில் விசாரணை அமைப்புகள் சிபிஐயும், அமலாக்கத் துறையும் விசாரணையை ஒழுங்காக நடத்தாமல் தொடர்ந்து அவகாசம் கேட்பதிலேயே குறியாக இருக்கின்றன என்று சாடிய ஓ.பி.சைனி, முன்ஜாமீன் வழங்குவதாகக் கூறினார். ஆக இப்போது சைனியிடம் இருந்து வரும் ஏர்செல் மேக்சிஸ் உட்பட 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிதம்பரத்தை திகாருக்கு அனுப்பிய நீதிபதி குஹார் முன்னிலையில்தான் விசாரணைக்கு வரும் என்பதே டெல்லி உயர் நீதிமன்றப் பதிவாளரின் அறிவிப்பாணை சொல்லும் சேதி. இதிலிருந்து பல செய்திகளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது என்கிறார்கள் டெல்லியில் பழகும் வழக்கறிஞர்கள்.

இது ஒருபுறம் இருக்க ஓ.பி.சைனியால் கடந்த 2017 டிசம்பர் 21ஆம் தேதியன்று வழங்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்று சிபிஐ தரப்பில் கடந்த சில வாரங்களாகவே வழக்கறிஞர்கள், சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று தலையைப் பிய்த்துக்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 2ஜி வழக்கின் தீர்ப்பில் ஓ.பி.சைனி குறிப்பிடும்போது, ‘கோப்புகளில் இல்லாத விஷயங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. யாராவது ஒருவர் தகுந்த ஆதாரங்களைக் கொண்டுவருவார் என ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோடை விடுமுறையில்கூட நீதிமன்றம் வந்தேன். பொது தளத்தில் நிலவும் கருத்துகளை வைத்துதான் சிபிஐ வாதங்களை முன்வைத்தனர். வலுவான ஆதாரம் எதையும் வைத்து குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது’ என்று கூறி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார் சைனி.

இப்போது, அந்தத் தீர்ப்பின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அப்பீலுக்குச் சென்றிருந்தாலும், இன்னொரு பக்கம் கீழமை சிபிஐ நீதிமன்றத்திலேயே 2ஜி வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிப்பதற்கான வாய்ப்புகள் சட்டப்படி உள்ளதா என்று சட்டத்தின் சந்துபொந்துகள், இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து அந்தக் குழு ஆய்வில் ஈடுபட்டுள்ளது. ‘அப்போதைய சிபிஐ இதுகுறித்த ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. இப்போது ஆதாரங்களைத் தாக்கல் செய்யத் தயார்’ என்ற கோரிக்கையின் மூலம் இப்போதைய சிபிஐ மீண்டும் 2ஜி வழக்கை முதலில் இருந்து விசாரிக்குமாறு அனைத்து 2ஜி தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும் நீதிபதி அஜய்குமார் குஹாரிடம் கோரிக்கை வைக்கக் கூடும் என்றும் டெல்லி உயர் வட்டாரத்தில் வலுவான பேச்சிருக்கிறது.

ஏற்கனவே மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் திமுக தலைவர் ஸ்டாலினைக் கைது செய்வது குறித்து பாஜக மேலிடத்தில் வலுவான ஆலோசனை நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டிருந்தோம். ‘அக்டோபர் வாக்கில் ஹரியானா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான வேலைகளில் அமித் ஷா தீவிரமாகிவிட்டார். இந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களின் மூலம் ராஜ்ய சபாவிலும் பாஜகவின் வலுவை அதிகப்படுத்துவது என்பது அவரது திட்டம். மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னால் அமித் ஷாவின் கவனம் திமுக மீது, குறிப்பாக ஸ்டாலின் மீது திரும்பக் கூடும்’ என்கிறார்கள் டெல்லி வாலாக்கள்.

’திமுக தமிழகத்தில் ஆட்சியை விட்டுப் போய் ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒன்பது ஆண்டுகளாக திமுகவின் பரம வைரியான அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. ஸ்டாலினை கைது செய்ய சட்ட ரீதியான வழி வகைகள் இருந்தால் அவர்கள் ஏற்கனவே செய்திருப்பார்கள். இந்த நிலையில் எதை வைத்து ஸ்டாலினை கைது செய்ய முடியும்?’ என்று டெல்லிவாலாக்களிடம் கேட்டபோது, ‘அதைப் பத்தியெல்லாம் உங்களுக்கு என்னஜி கவலை? யார்கிட்ட, எப்படி வாக்குமூலம் வாங்கணும்னு அவங்களுக்குத் தெரியாதா?’ என்ற கேள்வியே பதிலாக வருகிறது என்று அந்த டிஜிட்டல் திண்ணை பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

டெல்லியின் இந்த உள் நோக்கங்களை உணர்ந்துதான் எதிர்க்கட்சித் தலைவர் அடுத்து சிறை செல்வார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்புகளிலேயே கூறி வந்தார்கள். இந்த நிலையில், ‘யார்கிட்ட எப்படி வாக்குமூலம் வாங்கணும்னு அவங்களுக்குத் தெரியாதா?’ என்று டெல்லி தரப்பு கேட்டது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட ஷாகித் பால்வாவை மனதில் வைத்துதான் என்கிறார்கள். இடையில் ஷாகித் பால்வா, ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு ஏன் நடந்தது, எதற்காக நடந்தது என்ற பின்னணியை சிபிஐ தற்போது தோண்டியெடுத்து திரட்டி வைத்திருக்கிறது. இதன் அடிப்படையில்தான் 2ஜி வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிக்கை வைக்க தயாராகி வருகிறது சிபிஐ” என்ற முக்கியத் தகவலுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon