மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

காஷ்மீர் தலைவர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை வருடம் சிறை: பிரதமர் அலுவலகம்

காஷ்மீர் தலைவர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை வருடம் சிறை: பிரதமர் அலுவலகம்

காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்கள் ஒன்றரை வருடங்களுக்குக் குறைந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும், அதற்குப் பிறகே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசின் முதல் முறையான அதிகாரப் பூர்வக் குரல் இது என்பதால் தேசிய அரசியலில் கவனத்தைக் குவித்துள்ளது.

கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி காஷ்மீரின் 370 ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட நிலையில் ஆகஸ்டு 4 ஆம் தேதி முதலே ஜம்மு காஷ்மிரின் முக்கிய அரசியல் தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இவர்களில் ஃபரூக் அப்துல்லா எங்கே எனக் கேட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த ஹேபியஸ் கார்பஸ் வழக்கில், ‘ரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் பதில் சொல்ல முடியும்’ என்று மத்திய அரசு பதில் சொன்னது. ஆனால் இதை ஏற்காமல் 30 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில்தான் தடுப்புக் காவலில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஃபரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவரது வீடே சிறையாக அறிவிக்கப்பட்டுவிட்டது, இன்னும் இரு வருடங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இந்தச் சூழலில்தான் காஷ்மீர் மாநிலம் கட்ராவில் நடந்த நிகழ்வில் கடந்த ஞாயிறு அன்று பேசிய பிரதமர் அலுவலக இணையமைச்சரான ஜித்தேந்திர சிங், “மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிப்பது குறித்து ஊடகங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எல்லா எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் 18 மாதங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் சார்பில் நேற்று (செப்டம்பர் 17) ஜித்தேந்திர சிங்கைத் தொடர்புகொண்டு கட்ரா நிகழ்வில் அவர் பேசியது பற்றி கேட்கப்பட்டபோது, “ஆமாம். நான் அந்த நிகழ்வில் அப்படித்தான் பேசினேன். 18 மாதங்களுக்குள் காஷ்மீர் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினேன்” என்று தான் பேசியதை உறுதி செய்திருக்கிறார்.

மேலும் அவர், “காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுப்பது என்பது காங்கிரஸ் 72 வருடங்களாக 370 ஆவது பிரிவை வைத்திருந்தது போல் வெகு தாமதம் ஆகாது. சூழல் இயல்பு நிலைக்கு வந்த பிறகு வெகு விரைவில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon