மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

திகார்: சிதம்பரத்துடன் சிவக்குமார்

திகார்: சிதம்பரத்துடன் சிவக்குமார்

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக காங்கிரஸின் முக்கியத் தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கு ஒன்பது நாட்கள் அமலாக்கத் துறை காவல் வழங்கப்பட்டது. கடந்த 13ஆம் தேதி மேலும் நான்கு நாட்கள் அவருக்குக் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமலாக்கத் துறை காவல் முடிந்ததையடுத்து, டி.கே.சிவக்குமார் நேற்று (செப்டம்பர் 17) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிவக்குமாருக்காக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அஜய் குமார் குஹார், டி.கே.சிவக்குமாருக்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, சிவக்குமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், முதலில் டி.கே.சிவக்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, “சிவக்குமார் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தும் பட்சத்தில், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் அவரை டிஸ்சார்ஜ் செய்து திகார் சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது மற்றொரு காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமாரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய், 17 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon