மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

விக்ரம் லேண்டர் புகைப்படம்: ஏமாற்றிய நாசா?

விக்ரம் லேண்டர் புகைப்படம்: ஏமாற்றிய நாசா?

நாசாவால் இயக்கப்படும் ஆர்பிட்டர் நேற்று (செப்டம்பர் 17) விக்ரமின் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு மேலே பறந்து, அதன் நிலை குறித்து தீர்மானிக்கக்கூடிய புகைப்படங்களை எடுக்கவிருந்தது.

நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காகக் கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, செப்டம்பர் 7ஆம் தேதியன்று நிலாவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன், 2.1 கி.மீ தொலைவில் இஸ்ரோ தரைத்தளத்துடனான தொடர்பை இழந்தது. தொடர்பிலிருந்து விலகியதை அடுத்து சந்திரயான் 2 முழுமையாக வெற்றியடையாமல் போனது.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 8ஆம் தேதி, இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும், இன்னும் லேண்டருடனான தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை. தொடர்ந்து லேண்டருடன் தொடர்பை மீட்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் தொடர்பு ஏற்படுத்தப்படும் எனக் கூறினார்.

இதனிடையில், நாசா கடந்த 2009ஆம் ஆண்டு அனுப்பிய ஆர்பிட்டர், நிலாவைச் சுற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. நேற்று (செப்டம்பர் 17) விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியைக் கடந்து செல்லும் நாசாவின் ஆர்பிட்டர், அந்தப் பகுதியைப் படம் பிடிப்பதன் மூலம் விக்ரம் லேண்டரைக் கண்டறியவும், அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

மேலும், விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த 'ஹலோ' என்று ரேடியோ தகவலை நாசா அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் நாசா அறிவித்த தினமான நேற்று, விக்ரம் லேண்டர் குறித்த புகைப்படங்கள் வெளியாகும் என அனைவரும் ஆர்வமாகக் காத்திருக்கத் தொடங்கினர். இருப்பினும், நாசாவிடமிருந்து எந்தப் புகைப்படமும் தகவலும் வெளியாகவில்லை. நாசா ஆர்பிட்டர், விக்ரம் தரையிறங்கிய பகுதியைக் கடந்ததா என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

பிராட் பிட் கேட்ட கேள்வி!

நேற்று தனது ஆட் அஸ்த்ரா திரைப்படத்தின் விளம்பரச் சுற்றுப்பயணத்தின்போது, ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் பேச சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) அழைத்தார். ஆட் அஸ்த்ரா படத்தில் பிராட் பிட் விண்வெளி வீரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அழைப்பு, நாசா டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது விண்வெளியில் இருக்கும் நிக் ஹேக்கிடம், பிராட் பிட், “நான் கடந்த வாரம் ஜேபிஎல் (ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்திற்கு) செல்ல வேண்டியிருந்தது, அப்போது இந்தியாவின் சந்திரயான் 2வுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா அவர்களுக்கு உதவியது. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சந்திரயான் 2 விக்ரம் லேண்டரைப் பார்க்க முடியுமா?” என்று கேட்டார்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு அமெரிக்கர்கள், இரண்டு ரஷ்யர்கள் மற்றும் ஓர் இத்தாலியருடன் வசித்துவரும் ஹேக், "துரதிர்ஷ்டவசமாக இல்லை" என்று பதிலளித்தார்.

இஸ்ரோ தெரிவித்த நன்றி

சந்திரயான் 2 பயணத்தின் முக்கியமான கட்டத்தில் விக்ரம் லேண்டர் தொடர்பையிழந்து நேற்றுடன் 10 நாட்களாகிவிட்டன. விக்ரம் தரையிறங்கிய பகுதி, மிகவும் குளிராக மாறுவதற்கு முன்பு லேண்டர் இயங்க வேண்டும். லேண்டருடன் தொடர்புகொள்ள இஸ்ரோவுக்கு இன்றுடன் சேர்த்து நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில், இஸ்ரோ நேற்றிரவு ட்விட்டரில், “எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்ட நாங்கள், தொடர்ந்து முன்னேறுவோம்!” எனப் பதிவிட்டுள்ளது.இதுவரை சந்திரயான் 2வுக்கு மக்கள் அளித்த அனைத்து ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இஸ்ரோ பதிவிட்டது.

அதே சமயம், விக்ரம் லேண்டருடன் இனி தொடர்பு ஏற்படுத்தவே முடியாதா... அதற்கான அனைத்துச் சாத்தியங்களும் முடிவுக்கு வந்துவிட்டனவா... என்கிற இஸ்ரோவின் இந்தப் பதிவு, பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon