மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

ராகுலின் தாய்மாமன்: அமைச்சரை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

ராகுலின் தாய்மாமன்: அமைச்சரை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியர் அல்லர் என்று குறிப்பிட்டார். மேலும், “ராகுல் காந்தியின் தாயும் இத்தாலி. அவருடைய தாய்மாமனும் இத்தாலி. பிறகு எப்படி அவரை இந்தியர் என்று சொல்ல முடியும்? ராகுல் காந்தி பிறந்தது, படித்தது, வளர்ந்தது அனைத்தும் வேறு நாட்டில். ராகுல் காந்திக்கு இத்தாலியில் அவரது தாய்மாமன் மடியில் மொட்டை போட்டிருப்பார்கள். சட்டப்படி ராகுல் காந்தி இந்தியர். ஆனால், பிரச்சினைகள் அடிப்படையில் அவரை இந்தியராக எங்களால் பார்க்க முடியாது” என்று பேசியிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக நேற்று (செப்டம்பர் 17) கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓர் அரசியல் கோமாளியைப் போல வாய்க்கு வந்தபடி எல்லோரையும் வசை பாடுவதனால் ஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை ஒருமையில் தரக்குறைவாக நாக்கில் நரம்பின்றி பேசியிருக்கிறார். அப்பழுக்கற்ற தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்தவிதமான அருகதையோ, யோக்கியதையோ இல்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “ராஜேந்திர பாலாஜியின் கருத்துகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை நாம் மன்னிக்க முடியாது. ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை (இன்று) மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon