மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

பொதுத் தேர்வு மூலம் குலக்கல்வி திட்டம்: வேல்முருகன் காட்டம்!

பொதுத் தேர்வு மூலம் குலக்கல்வி திட்டம்: வேல்முருகன் காட்டம்!

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதைக் கண்டித்து சென்னையில் நேற்று (செப்டம்பர் 17) தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பதையடுத்து இந்த முடிவைக் கைவிட வேண்டும் என முக்கியமான அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பொதுத் தேர்வுக்கு மாநிலமெங்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த நிலையில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கைகளை எதிர்த்து நேற்று (செப்டம்பர் 17) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய வேல்முருகன் கூறும்போது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்தார். இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து மீண்டும் குலக்கல்வி முறையைக் கொண்டுவருவதற்கான முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என்றும் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.

மேலும் வேல்முருகன் கூறியதாவது, “இந்தக் கல்விமுறையில் சீர்திருத்தம் செய்கிறோம் என்று கூறுகிறார்கள். என்ன சீர்திருத்தம்? இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, 14 வயதிற்குட்பட்ட எந்த மாணவரையும் தோல்வி அடைந்தவர் என்று அறிவிக்கக்கூடாது. ஒரு போட்டியை 5 வயது குழந்தைக்கும், 6 வயது குழந்தைக்கும், 11 வயது குழந்தைக்கும் உருவாக்குவது எந்த விதத்தில் நியாயம்? இது கல்வி கொடுக்கிற லட்சணமா? இன்றைக்குப் பத்தாவதில் ஒரு மாணவன் தோல்வியடைந்து விட்டால், மீண்டும் 11ஆவது படிக்க அவனுக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு அவன் இடைநிறுத்தம் செய்கிறான்.

நிலைமை இப்படி இருக்கையில், 5ஆம் வகுப்பிலேயே நீங்கள் ஒருவனுக்கு ‘பெயில்’ போட்டு வீட்டுக்கு அனுப்பிவிடுவீர்கள்; அவன் மீண்டும் மாடு மேய்க்க வேண்டும்; கூலி வேலை செய்ய வேண்டும்; அவன் படிப்பைத் தொடரக்கூடாது என்பது தானே உங்கள் எண்ணம். முதலில், தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்துப் பள்ளிகளிலும் சமமான வசதிகளைச் செயல்படுத்துங்கள். போதுமான ஆசிரியர்களை நியமியுங்கள், போதுமான இடவசதியை ஏற்படுத்தித் தாருங்கள்” என அரசை விமர்சித்துப் பேசினார் வேல்முருகன்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon