மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

பலத்த பாதுகாப்பில் கோவளம்!

பலத்த பாதுகாப்பில் கோவளம்!

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்து பேசவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு வரும் அக்டோபர் மாதம் தமிழகத்தின் கலைநகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் மோடியும், ஜீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

வரும் 11ஆம் தேதி சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் ஜீ ஜின்பிங்கு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்கவுள்ளார், அங்கிருந்து கார் மூலம் கோவளம் செல்லவுள்ளார். இதுபோன்று மோடியும் கோவளத்துக்கு அன்றைய தினம் வரவுள்ளார். அங்குள்ள அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மோடியும், ஜி ஜின்பிங்கும் தங்கவுள்ளனர். கடற்கரை ஓரத்தில் உள்ள இந்த ஓட்டலின் அறைகளைத் தரம் உயர்த்தும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுபோன்று இருநாட்டுத் தலைவர்களுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கும் வகையில் மத்திய மாநில அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருவரும் தங்கும் அந்த ஓட்டலின் அறைகளுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அக்டோபர் 12 மற்றும் 13ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மோடியும், ஜி ஜின்பிங்கும் இரு நாட்டுக்கும் இடையே இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன. ஆனால் இந்த சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

இருவரும் தங்கவிருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே, புல்வெளியில் அமர்ந்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஓட்டல் புல்வெளி பகுதிகளும் அழகுபடுத்தும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாமல்லபுரத்தில் உள்ள அர்ச்சுனன் தபசு காட்சி, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோயில் ஆகிய மூன்று இடங்களிலும் இரு நாட்டுத் தலைவர்களும், அதிகாரிகளும் புகைப்படம் எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர சீன அதிபருடன் வரும் அந்நாட்டு உயர் அதிகாரிகளுக்கு, மாமல்லபுரத்தில் உள்ள ஜி,ஆர்,டி நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்காக அறைகள் முன்பதிவு செய்யப்படவுள்ளது. 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சந்திப்பை முடித்தவுடன் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக புறப்பட்டு டெல்லி செல்லவுள்ளனர். அதற்கு முன்னதாக கோவளம் அல்லது சென்னையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீன அதிபர் வருகையை ஒட்டி கோவளம் உட்படப் பல பகுதிகள் இப்போதே பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று (செப்டம்பர் 17) மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சாலைகளைச் சீரமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஆகியவை பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon