மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!

வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம் எனக் கூறிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.

டெல்லியில் நேற்று (செப்டம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது துறை ரீதியான 100 நாள் சாதனைகளை விளக்கினார். அப்போது பேசிய அவர், “நமது அண்டை நாடு இயல்பான நிலைக்குத் திரும்பும்வரை நமக்கு அவர்களால் சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அவர்கள் நிறுத்த வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவுடையது என்ற நமது நிலைப்பாட்டில் எப்போதுமே மாற்றமில்லை. அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்” எனக் கூறினார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து கூறிய அடுத்து சில மணிநேரங்களிலேயே பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜெய்சங்கரின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:

“இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதை சர்வதேச நாடுகள் மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவிடமிருந்து வந்த இந்த போர்க்குணம் கொண்ட பொறுப்பற்ற கருத்துக்கள், தற்போது நிலவி வரும் அழுத்தத்தை மேலும் அதிகரிக்க வலிமை கொண்டதாகவும், அமைதியை குலைக்கவும், காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தான் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் கூறிய பொறுப்பற்ற கருத்துக்களை வன்மையாக கண்டிக்கவும் மறுக்கவும் செய்கிறோம். இக்கருத்துக்கள் காஷ்மீர் மீதான இந்தியாவின் விரக்தியையும், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் வெளிப்படையாகக் காட்டுகிறது.

காஷ்மீரிலுள்ள அப்பாவி மக்கள் மீது இந்தியா நிகழ்த்தும் குற்றங்களை மறைக்க சர்வதேச நாடுகளின் கவனத்தை பாகிஸ்தான் மீது பழி சுமத்தி திசை திருப்ப பார்க்கிறது. பாகிஸ்தான் அமைதியின் பக்கம் நிற்கிறது, அதே சமயம் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுக்க தயாராகவும் இருக்கிறது” என பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், “தேச வெறியைத் தூண்டும் சொற்களிடம் தஞ்சமைடைவதற்கு பதிலாக, இந்தியா தனது சட்டவிரோத நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் நடத்தும் கடுமையான மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தின் இறுதித் தீர்வுக்கான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களுடன் முழுமையாக இணங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு சட்ட அந்தஸ்தை(ஆர்டிகள் 370, ஆர்டிகள் 35A)மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டம் அதிகரித்து வருகின்றது.

காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்குப் பின், இந்தியாவுடனான அரசியல் உறவை பாகிஸ்தான் துண்டித்துள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் அரசு அமெரிக்கா, சீனா போன்ற உலக நாடுகளிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆதரவு திரட்டி வருகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஜெனீவா மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் கவலை அளிப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால், துவக்கத்திலிருந்தே இந்தியா, காஷ்மீர் உள்நாட்டு விவகாரமென்றும், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் வேறு எந்த நாட்டையும் தொந்தரவு செய்ய இந்தியா விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக கூறிவருகிறது.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon