மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

பாமகவில் இருந்து வந்தால் பதவி இல்லையா?- அமமுகவில் புகைச்சல்!

பாமகவில் இருந்து வந்தால் பதவி இல்லையா?- அமமுகவில் புகைச்சல்!

கடந்த இரு வாரங்களாக தினந்தோறும் அமமுக தலைமை அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து அளவுகளிலும் நிர்வாகிகளை நியமித்து முடித்துவிட்டார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

இந்த நிலையில், “கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக நூற்றுக்கணக்கான பாமக நிர்வாகிகள் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததைக் கண்டித்தும் எதிர்த்தும் அக்கட்சியில் இருந்து விலகி டிடிவி தினகரனை நம்பி அமமுகவில் இணைந்தார்கள். ஆனால் பாமகவில் இருந்து வந்த எந்த நிர்வாகிக்கும் எந்த அளவிலும் அமமுகவில் பதவி வழங்கப்படவில்லை” என்ற புகைச்சல் பாமகவிடம் இருந்து சென்ற நிர்வாகிகள் மத்தியில் புகைந்துகொண்டிருக்கிறது.

இதுபற்றி அவர்களிடம் காது கொடுத்தோம். “டாக்டர் ராமதாஸ் பாமகவின் தலைமைப் பொறுப்புகளை வன்னியர் அல்லாதவர்களுக்கு வழங்கியதோடு அவர்களுக்கு முக்கியத்துவமும் அளித்து வந்தார். கொங்கு மண்டலத்திலும்,தென்மாவட்டங்களிலும் பாமகவை காலூன்றச் செய்வதற்காக பல முயற்சிகள் எடுத்தார். தென் மாவட்டத்தில் நாடார் சமுதாயத்தில் இருந்து சமூக நீதியின் முக்கிய தலைவரான சவுந்தர பாண்டியனாரின் பேத்தி திலகபாமாவை அழைத்து பேசி கட்சியின் பொருளாளராக்கினார் ராமதாஸ்.

கொங்கு வேளாளர்களின் அடையாளமாக மாறிய கோவை செழியனோடு மாணவப் பருவம் முதல், உடனிருந்து பணியாற்றிய அவரது உறவினரான பொங்கலூர் மணிகண்டன் கொங்கு மண்டலத்தில் நன்கு அறிமுகமானவர். அவரை அழைத்துக் கட்சியில் இணைத்து கட்சிக்கு துணைத்தலைவராகவும்,கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராகவும் நியமித்தார்.

அதேபோல பாமகவில் 30 ஆண்டுகள் பணியாற்றி மாவட்டச் செயலாளர் முதல் மாநிலத் துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கயம் மாதவன். இவர் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவ்வாறு பாமக சாதிக்கட்சி இல்லை அனைவருக்குமான பொதுவான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க அனைத்து சமுதாயத்துக்கும் பொறுப்புகளை அளித்தார் ராமதாஸ்.

அன்புமணிதான் முதல்வர்.திமுக-அதிமுகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்று ராமதாசும் அன்புமணியும் சத்தியம் செய்து வந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமகவில் இருந்து பலர் விலகினார்கள். நடிகர் ரஞ்சித்,பொங்கலூர் மணிகண்டன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தனர்.அதன் பிறகு காங்கயம் மாதவனும் பாமகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். பாமக மாவட்ட செயலாளர்களாக இருந்த பொள்ளாச்சி கணேஷ்.நாமக்கல் விஜய் கணேஷ்,திருப்பூர் பிரதீப்குமார்,சூலூர் சம்பத்,கோவை நரேஷ்,கிஷோர்,ஈரோடு பரமேஸ்வரன், நடராஜ்,மாநில மாணவர் அணிச் செயலாளர் பொள்ளாச்சி ராகுல்,மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் சக்தி,கணேஷ்குமார் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாமகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தனர்.

அக்கட்சியில் இணைந்த நிர்வாகிகள் அனைவரும் திருப்பூர் சிவசாமி போன்ற மாவட்ட செயலாளர்களால் பெரும் அவமானத்துக்கு ஆளாக்கப்பட்டும் அமைதியாக இருந்தே வந்தனர். இந்நிலையில் அமமுக அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில் பாமகவிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு அமமுகவில் இணைந்த நிர்வாகிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டனர். இதனால் அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட நிலையில் நொந்து பொய் உள்ளனர்” என்றனர்.

இதுகுறித்து பாமகவில் 30 ஆண்டுகள் இருந்து அமமுகவுக்கு வந்த காங்கயம் மாதவனிடம் பேசினோம்.

“நான் கடந்த சட்டமன்ற இடைத் தேர்தலின் போது சூலூருக்கு வந்த அமமுக பொதுச் செயலாளர் முன்னிலையில் அமமுகவில் இணைந்தேன். என்னைப் போல பலர் இணைந்தோம்.

நாங்கள் பதவிக்காக அமமுகவுக்கு வரவில்லை. பணி செய்யவே வந்தோம். ஆனால் பாமகவில் இருந்து வந்த ஒருவருக்குக் கூட பொறுப்பில்லை என்பது நெருடலாக உள்ளது. பொதுச் செயலாளரிடம் எங்களைப் பற்றிய முழு தகவல்கள் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அமமுகவில் சேர இன்னும் பலர் தயாராக இருக்கும்போது அவர்களுக்கான வாசல் அடைபடும் நிலை உருவாகிடக் கூடாது என்று எண்ணுகிறேன். மற்றபடி பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தமில்லை. பாமகவில் இருந்து நம்பி வந்தவர்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார் மூத்த அரசியல்வாதி என்ற பொறுப்புணர்வோடு!

இதுபற்றி அமமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “கொங்கு பகுதியில் பாமகவில் இருந்து அப்போது பலரையும் அமமுகவுக்குள் கொண்டுவந்தவர் புகழேந்தி. அவர் இப்போது டிடிவி தினகரனுடன் சுமுக உறவில் இல்லை. எனவேதான் புகழேந்தியால் கொண்டுவரப்பட்டவர்களுக்கு பதவி போடக் கூடாது என்று தினகரனைச் சுற்றியுள்ளவர்களே முடிவு செய்துவிட்டார்கள். இதுபற்றி தினகரனுக்குக் கூட யாரும் சொல்வதில்லை” என்கிறார்கள்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon