மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

விஜய்க்கு நாயகியான மாளவிகா

விஜய்க்கு நாயகியான மாளவிகா

பிகில் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 64’ படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் பரபரப்புக்கு இணையாக இருக்கிறது ‘விஜய் 64’ படம் பற்றிய செய்திகள். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி முடித்து, அதன் இறுதிக் கட்டபணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷி கண்ணா, ராஷ்மிகா மந்தானா, கியாரா அத்வானி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுவந்தது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு நாயகியாக மாளவிகா மோகனன் இணைந்திருக்கிறார். இவர் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் தங்கையாகவும், சசிகுமாரின் மனைவியாகவும் நடித்தவர். 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் பிஹைண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச கவனம் பெற்றார்.

மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. அதிக படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த நிலையில், விஜய்யுடன் நடிக்க தனது கால்ஷீட்களை பரிசீலனை செய்து வருகின்றார். அதன் பின்னர், விஜய் சேதுபதி நடிப்பது அதிகாரபூர்வமாகும்.

முகமூடி, யுத்தம் செய், மாயா, அடங்க மறு, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யா, இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ளவுள்ளார். மாநகரம் படத்தின் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் படத்தொகுப்பு, ஆக்‌ஷன் ஸ்டண்ட் சில்வா.

எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் ஜகதீஷ் ‘விஜய் 64’ படத்தை தயாரிக்கவுள்ளார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon