மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 நவ 2019

குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு தடை கேட்டு விவாதம்!

குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு தடை கேட்டு விவாதம்!

தலைமை நீதிபதி தஹில் ரமணி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. ஆனால், 75 நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை, 3 நீதிபதிகளை மட்டுமே கொண்ட நீதிமன்றத்துக்கு மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஹில் ரமணி தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், சிறந்த நிர்வாகத்தை அளிக்கவே இடமாற்றங்கள் நடைபெறுகின்றன என்று பதிலளித்திருந்தது. தஹில் ரமணியின் புகைப்படம் உயர் நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் முறையிட்டார். நீதிபதிகள் சத்ய நாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் கற்பகம் சார்பாக இன்று (செப்டம்பர் 18) முறையீடு செய்த வழக்கறிஞர் பிரபாகரன், “தலைமை நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமா கடிதம் குறித்து இதுவரை குடியரசுத் தலைவர் முடிவெடுக்கவில்லை. எனவே கொலிஜியம் குழுவின் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், தஹில் ரமணியை மேகாலயாவுக்கு இடமாற்ற செய்து உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவரின் செயலாளருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அப்போது, உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் உயர் நீதிமன்றத்தை ஏன் அணுகுகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, “கொலிஜியத்தில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தது நிர்வாக உத்தரவு என்பதால் உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம்” என்று பிரபாகரன் விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, மனு பட்டியலிட்ட பிறகு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon