மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

அசுரனில் இணைந்த ‘ஒத்த சொல்லால’ கூட்டணி!

 அசுரனில் இணைந்த ‘ஒத்த சொல்லால’ கூட்டணி!

கலைப்புலி எஸ்.தாணு ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ‘அசுரன்’, மண்ணின் கதையையும் மக்களின் கதையையும் பேசும் படமாக உருவாகியிருக்கிறது.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களின் வெற்றிக்குப் பின் இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான நான்காவது படமென்பதால், அசுரன் மீதான எதிர்பார்ப்பும் தலைப்பைப் போலவே உள்ளது.

இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அசுரன் படத்தில் இடம்பெறும் 'கத்தரி பூவழகி’ என்ற பாடல் வெளியான தினத்திலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூப்பில் மட்டும் 22 லட்சம் பார்வையாளர்களையும் கடந்து இப்பாடல் பரவி வருகிறது. இப்பாடலை எழுதியவர் பிரபல பாடலாசிரியர் K. ஏகாதேசி. கத்தரி பூவழகி பாடலை வேல்முருகன், ராஜலக்ஷ்மி, நெப்போலியா ஆகிய மூவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

மதுரையை பின்புலமாகக் கொண்டவர் ஏகாதேசி. இவர் தன் 18ஆவது வயதிலேயே முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். இவரது ஹைக்கூ தோப்பு என்ற கவிதைத் தொகுப்பு பல விருதுகளை பெற்றது. இசை ரசிகர்களை கொள்ளை கொண்ட ஒத்த சொல்லால, கோணக் கொண்டக்காரி போன்ற பாடல்கள் இவரது அடையாளம். வட்டார வழக்குகளுக்கு முக்கியத்துவமளிக்கும் இவரது வரிகள் தனித்துவமானது. கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை என்ற படத்தையும் இயக்கியுள்ளார் ஏகாதேசி.

சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் K. ஏகாதேசி, அசுரன் படம் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்தார்:

ஒத்த சொல்லால பாடல் பெரிய வெற்றி. அது ஐந்து பேருடைய கூட்டணி வெற்றி எனக் கூறலாம். நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றி மாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியரான நான், பாடகர் வேல்முருகன். அந்த பாடலுக்கு பெரிய ரீச் இருந்தது. திரும்பவும் அசுரனில் இந்த ஐந்து பேரின் கூட்டணி இணைந்திருக்கிறது.

இந்த பாடலை எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர், இயக்குநர் குழுவிற்கு என்னுடைய நன்றி. தொடர்ந்து நண்பர் ஜி.வி. பிரகாஷூடன் முதல் படத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து வெற்றி மாறனுக்கும் ஜி.வி.க்கும் பிடிக்கும். அவரவர் துறையில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்களுக்கு பிடித்த எழுத்தாளனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த கத்தரி பூவழகி பாடலுக்காக பேசியபொழுது, ஒத்த சொல்லால பாடலைப் போல வட்டார வழக்குடன் வரிகள் அமைய வேண்டும் என விரும்பினோம். அதற்காக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாட்டுப்புற இலக்கியங்களை வாசித்தேன். பாடல் வரிகளின் மண் வாசனைக்காக தயார்படுத்திக் கொண்டு எழுதும் போது பாடல் நன்றாக அமைந்தது.”

கரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது அசுரன். காத்திரமான ஒரு நாவலை வெற்றி மாறன் போன்ற தீவிரமான கலைஞனின் கைவண்ணத்தில், தனுஷின் நடிப்பில் காண ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.

அசுரனின் வேட்டை இன்னும் 17 நாட்களில்!

விளம்பர பகுதி

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon