மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் அதிகாரங்கள் இனி தலைவருக்கு... மாற்றத்துக்குத் தயாராகும் திமுக!

டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் அதிகாரங்கள் இனி தலைவருக்கு... மாற்றத்துக்குத் தயாராகும் திமுக!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொகேஷன் அண்ணா அறிவாலயம் காட்டியது. முதலில் திமுகவின் அமைப்பு விதிகள் புத்தகத்தின் சில பக்கங்கள் ஸ்கிரீன் ஷாட்டில் வந்து விழுந்தன. பின் செய்தி வந்தது.

“தேசிய அரசியல் ரீதியாகவும், மாநில அரசியல் ரீதியாகவும், உட்கட்சி அரசியல் ரீதியாகவும் எப்போதுமே திமுகவுக்கு என்று ஒரு பரபரப்பு ஸ்தானம் உண்டு. அதேபோல இப்போதும் இந்தி எதிர்ப்புப் போராட்ட வாபஸ் அறிவிப்பால் தேசிய அளவில் பரபரப்பு கிளப்பிய திமுக அதை விவாதிப்பதற்கு முன் அக்டோபர் 6ஆம் தேதி பொதுக்குழு என அறிவித்திருக்கிறது.

திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுகவின் பொதுக் குழு கூட்டம் நடைபெறும், கழகப் பணிகள் கழகச் சட்டத்திருத்தம் தணிக்கைக் குழு அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்று செப்டம்பர் 19ஆம் தேதி அறிவித்திருக்கிறார். வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில்தான் பொதுக் குழு நடைபெறும். ஆனால், கடந்த பொதுக் குழுக் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தபோது போதிய இடமின்றி வெளியேயும் கூட்டம் வழிந்தது. மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் பொதுக் குழுவுக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. அதனால்தான் இம்முறை இடம் மாற்றப்பட்டது. இடமாற்றம் மட்டுமா? இந்தப் பொதுக் குழுவில் வேறு சில மாற்றங்களும் இருக்கும் என்கிறார்கள்.

இந்தப் பொதுக் குழுவின் முக்கிய அஜெண்டா கழகச் சட்டத்திருத்தம்தான் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.

திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் பேராசிரியர் அன்பழகன் நெடு நாட்களாகவே ஓய்வில்தான் இருந்து வருகிறார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் வீட்டிலேயே இருக்கும் பேராசிரியர் அன்பழகனை அவ்வப்போது திமுக தலைவர் தேடிச் சென்று சந்தித்து வருகிறார். இந்தச் சூழலில் திமுக பொதுக் குழு கூடும் முன்னரே திமுகவின் சட்டத்திருத்தக் குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் திமுகவில் இருக்கும் அமைப்பு விதிகளின்படி சில மாற்றங்களை முன்னெடுப்பதற்கான வேலைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதில் முக்கியமான அம்சம் பொதுச் செயலாளர் பதவி. திமுகவில் பொதுச் செயலாளர் பதவி என்பது மிக முக்கியமானது. அண்ணா முதன்முதலில் திமுகவைத் தொடங்கியபோது அக்கட்சிக்குத் தலைவர் யாரும் கிடையாது. பொதுச் செயலாளர் பதவிதான் உயரிய பதவி. எப்போதுமே நான் கண்ட தலைவரும், கொண்ட தலைவரும் பெரியார்தான் என்பதால் தலைவர் என்ற பதவியையே திமுகவில் அண்ணா உருவாக்கவில்லை. ஆனால் அண்ணா மறைவுக்குப் பின்னர் திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவரானார் கலைஞர். அவரே மறையும் வரை தலைவராக இருந்தார். திமுகவில் முதலில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டபோது, பொதுச் செயலாளர் பதவியின் பல்வேறு அதிகாரங்கள் தலைவர் வசம் வந்தன. பொதுச் செயலாளருக்குப் பல அதிகாரங்கள் இருந்தாலும், தலைவரைக் கலந்து ஆலோசித்துதான் அவர் முடிவெடுக்க வேண்டும் என்பதும் திமுகவின் அமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. அதில், விதி 18 பிரிவு 3இல் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் வர இருக்கிற பொதுக் குழு கூடுகிறது என்கிறார்கள்.

‘பொதுச் செயலாளர் விலகினாலோ அல்லது நீண்ட நாட்களாகக் கழகப் பணி ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டாலோ, புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிற வரையில் பொதுச் செயலாளருக்கென சட்ட திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கழகத் தலைவரே மேற்கொள்வார்’ என்று திமுகவின் பைலாவின் 40 ஆம் பக்கத்தில் விதி 18 பிரிவு 3 இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இப்போதைய பொதுச் செயலாளர் பேராசிரியர் நீண்ட நாட்களாகக் கழகப் பணி ஆற்ற முடியாத நிலையில் இருக்கிறார். அதனால் அவரது அதிகாரங்கள் கழகத் தலைவருக்குச் சென்று சேர்கின்றன. இந்த விதியை மேற்கோள்காட்டி ஒரு தீர்மானம் வரும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படலாம் என்கிறார்கள் அறிவாலயத்தின் அலுவலக வட்டாரத்தில். இதுவும் புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரைக்கும்தான்.

அப்படியென்றால் புதிய பொதுச் செயலாளர் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ஒரு கேள்வியும் திமுகவுக்குள் எழுந்து வருகிறது. அதுபற்றி விசாரித்ததில் பேராசிரியர் அன்பழகன் குடும்பத்தினருக்கு ஓர் அபிப்ராயம் இருக்கிறது. அதாவது, ‘தலைவர் கலைஞரோடு 50 வருடத்துக்கும் மேலாக ஒன்றாகப் பணியாற்றியவர் பொதுச் செயலாளர். அவர் இப்போது முதுமையின் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஆனால் இப்போதும் தலைவர் வருகிறார் என்றால் திடீரென கண்களை உருட்டித் தேடுகிறார். சில நேரம் பேசினாலும் கட்சி பற்றியே பேசுகிறார். அவரை அறிவாலயத்துக்கு அவ்வப்போது கூட்டிச் சென்று வந்தால் இயல்பாகி விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அவரை பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து இப்போதைக்கு மாற்ற வேண்டாமே...’ என்பதுதான் பேராசிரியர் குடும்பத்தினரின் அபிப்ராயம். இதுவும் ஸ்டாலினுக்குச் சரியாகவே பட்டிருக்கிறது.

எனவே, புதிய பொதுச் செயலாளர் யார் என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைய சூழலில் நீண்ட நாட்கள் பணியாற்ற முடியாத நிலையில் பொதுச் செயலாளர் இருப்பதால் திமுக அமைப்பு விதிகளின்படி அவரது அதிகாரங்களைத் தலைவர் மேற்கொள்வார் என்று ஒரு தீர்மானம் வரும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும், அமைப்பு விதிகளில் கிளைச் செயலாளர், ஊராட்சி செயலாளர் நிலைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon