மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

முதலீடுகள்: முதல்வர் அமைத்த உயர்நிலை குழு!

முதலீடுகள்: முதல்வர் அமைத்த உயர்நிலை குழு!

தமிழகத்தில் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தவும், அதற்கான அனுமதி வழங்குவதைத் துரிதப்படுத்தவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு அரசு முறை பயணமாகக் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதல்வர், “வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டுப் பயணம் மூலமாகக் கிடைத்துள்ள முதலீடுகளைச் செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி குழு அமைத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று (செப்டம்பர் 19) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில் துறை முதன்மைச் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலராகச் செயல்படுவார். ஒரு மாதத்துக்கு மேலாக நிலுவையில் உள்ள தொழில் தொடங்க கோரும் அனுமதிகளுக்கு இக்குழு தீர்வு காணும். பெரும் முதலீட்டாளர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி நிலையில் சிறப்பு அலுவலரைக் கொண்டு முதலீடுகளை எளிதாக்கும் பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வேலுமணி, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இடம்பெறவுள்ளனர். மாதத்துக்கு ஒருமுறை இக்குழுவின் கூட்டம் நடைபெறும்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon