மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

கிச்சன் கீர்த்தனா: ரவை பாயசம்

கிச்சன் கீர்த்தனா: ரவை பாயசம்

புரட்டாசி மாதக் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, நவராத்திரியை வரவேற்க தயாராகி வருகிறார்கள் பலர். விதவிதமான பாயசங்களுக்குப் புகழ்பெற்றது நவராத்திரி. பால், பருப்புப் பாயசங்களுக்கு நிகரான சுவை கொண்டது இந்த ரவை - தேங்காய்ப்பால் பாயசம். பாயசப் பிரியையான திருமகளுக்கு இதைப் படைத்து அவளின் திருவருளைப் பெறலாம். திருமகள் அருளிருந்தால் செல்வ வளத்தோடு செழிப்பான வாழ்க்கையையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

என்ன தேவை?

ரவை - 200 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப்

இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப்

பாதாம் - 20

திராட்சை - 20

முந்திரி - 20

நெய் - 50 கிராம்

எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு வடிகட்டி கெட்டியான முதல் பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அதே தேங்காய் திப்பியில் மீண்டும் நீர்விட்டு இரண்டாவதாகப் பிழிந்த பாலையும் எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, மெல்லிய சூட்டில் ரவையைப் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும். வறுத்த ரவையை அடிகனமான பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். ரவை வெந்து கொதிக்கும்போது அதில் சர்க்கரையைப் போட்டு அடிபிடிக்காமல் கிளறவும். சர்க்கரை கரைந்து இளகிவரும்போது முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதன் மீது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சையை அப்படியே நெய்யோடு கொட்டிக் கிளறவும்.

குறிப்பு

கமகம வாசனையோடு தயாரான இந்தப் பாயசத்தில் பொடித்த பேரீச்சை போன்ற உலர் பழங்களையும் சேர்க்கலாம். சுவை கூடும்.

நேற்றைய ரெசிப்பி: சோளச் சுண்டல்

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது