மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 20 பிப் 2020

பி.எஃப். பாக்கி: சரவண பவன் நிறுவனத்திடம் விசாரணை!

பி.எஃப். பாக்கி: சரவண பவன் நிறுவனத்திடம் விசாரணை!

உலகம் முழுதும் கிளைகள் பரப்பி ஹோட்டல் தொழிலில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த சரவண பவன் நிறுவனம், தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, ஈ.எஸ்.ஐ. உள்ளிட்டவற்றைக் கூட செலுத்த முடியாத நிலைக்கு சரவணபவன் நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது.

சரவண பவன் ஹோட்டல் நிறுவனரான ராஜகோபால் தன் மீது பல வருடங்களாக நடந்து வந்த சாந்தகுமார் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியதை அடுத்து கடந்த ஜூலை 9ஆம் தேதி சென்னை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல் நிலை சீராக இல்லாததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். ஜூலை 18 ஆம் தேதி அவர் ஸ்டான்லி மருத்துவமனையிலேயே மரணம் அடைந்தார்.

ராஜகோபால் உயிருடன் இருக்கும்போதே அவரது நிறுவனம் பல சரிவுகளை சந்திக்கத் தொடங்கியதாக தெரிகிறது. குறிப்பாக ஊழியர்களுக்காக வருங்கால வைப்புத் தொகை ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாய்களை சரவண பவன் நிர்வாகம் நெடுநாட்களாகவே பாக்கி வைத்திருந்தது.

இதை ஒட்டி கடந்த செவ்வாய்க் கிழமை சரவண பவன் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம் சென்னை பிஎஃப் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். சுமார் இருபது கோடி ரூபாய் சரவண பவன் நிறுவனம் பிஎஃப் பாக்கி வைத்திருப்பதை அடுத்தே இந்த விசாரணை நடந்திருக்கிறது. அப்போது, “கடந்த மாதத்தில் ஒரு கோடி ரூபாய் செலுத்தியிருக்கிறோம். 2020 மார்ச்சுக்குள் 3 கோடி ரூபாய் செலுத்திவிடுகிறோம். முழு பாக்கியையும் விரைவில் செலுத்திவிடுகிறோம்” என்று சரவண பவன் நிறுவனம் உறுதியளித்திருக்கிறது. அதையடுத்து விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

மூவாயிரத்து 200 ஊழியர்களை இந்தியாவில் மட்டுமே கொண்டிருக்கும் சரவண பவன் ஹோட்டல் நிறுவனத்தில் முன்பிருந்த அளவுக்கு வருமானம் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon