மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 19 பிப் 2020

கார்பரேட் வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன்

கார்பரேட் வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன்

கோவாவில் இன்று (செப்டம்பர் 20) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்து, தொழில் நிறுவனங்களுக்கான புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிர்மலா சீதாராமன் இன்று கார்ப்பரேட் வரி, செஸ் வரி உள்ளிட்டவற்றைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ” உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கும் பெருநிறுவன வரி விகிதங்களைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, ”உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்பரேட் வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த செஸ் மற்றும் கூடுதல் வரியைச் சேர்ந்த கார்பரேட் வரி 25.17 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இணைக்கப்பட்ட எந்தவொரு புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனமும் 15 சதவிகித வரி செலுத்தினால் போதுமானது. மேட் வரி 18.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று குறைந்தபட்ச மாற்று வரியான மேட் வரியை 22சதவிகித வருமான வரி கட்டும் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை.

மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் பங்குகள் மூலம் கிடைக்கும் தொகைக்குக் கூடுதல் வரி விதிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. அதுபோன்று ஜூலை 5 ஆம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குகளை வாங்குதல் அல்லது விற்பனை செய்திருந்தாலோ சூப்பர் ரிச் வரி விதிக்கப்படாது.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த வரி சலுகைகள் அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார், நடப்பு நிதி ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon