மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ஸ்டாலின்-1, எடப்பாடி-1, அமித்ஷா-1: ஜெகன் ஒதுக்கீடு பின்னணி!

ஸ்டாலின்-1, எடப்பாடி-1, அமித்ஷா-1: ஜெகன் ஒதுக்கீடு பின்னணி!

திருமலையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது திருமலை திருப்பதி தேவஸ்தானம். 1932ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் அரசாங்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் சேவைகள், தரிசனங்கள், சேவை கட்டணம் நிர்ணயித்தல், ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதிகள் போன்றவற்றினை இந்த அமைப்பு செய்கிறது. மேலும் திருப்பதி கோயிலுக்குச் சொந்தமான மருத்துவமனை, கல்லூரி உள்ளிட்ட சொத்துக்களையும் நிர்வகித்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு ஆந்திர அரசு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளது. 25 பேர் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்களின் சிபாரிசின் பேரில் நியமனம் செய்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

தேவஸ்தானம் குழுவின் உறுப்பினராக திமுக தலைவர் ஸ்டாலின் சிபாரிசின் பேரில் டாக்டர் நிஷிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக அவருடைய உதவியாளர் போல செயல்பட்டுவந்தவர் ஜனார்த்தன ரெட்டி. அவருடைய மகன் மருத்துவராக உள்ளார். தற்போது, ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைக்கு செல்லும்போதெல்லாம் மருத்துவரான அவர்தான் உடன்சென்று வருகிறார். இந்த நிலையில்தான் ஜனார்த்தன ரெட்டி மகனின் கல்லூரி தோழியான நிஷிதாவை அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கும்படி, ஜெகன் மோகன் ரெட்டியிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் சிபாரிசை அடுத்து நிஷிதாவை அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசின் பேரில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவை, அறங்காவலர் குழுவுக்கு நியமித்துள்ளார் ஜெகன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரம்ப காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது , அவருடைய சட்டமன்ற பெஞ்ச் மேட் குமரகுரு. அப்போதிலிருந்து இருவரும் நெருக்கமாக இருந்துவருகின்றனர். குமரகுருவை அமைச்சராக்கவும் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுவதாக அதிமுகவுக்குள் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக பரிந்துரைத்துள்ளார் எடப்பாடி. குமரகுரு உறுப்பினரானது பிடிக்காத உள்ளூர் அமைச்சரான சி.வி.சண்முகம் கோபத்தில் இருந்துவருகிறாராம்.

சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதனும் அறங்காவலர் குழு உறுப்பினராகியுள்ளார். பாஜக தலைவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்தான் இந்த கிருஷ்ணமூர்த்தி. அமித் ஷாவின் சிபாரிசின் பேரில் கிருஷ்ணமூர்த்தியை தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு உறுப்பினராக நியமித்துள்ளார் ஜெகன்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிசிசிஐயின் முன்னாள் சேர்மனுமான சீனிவாசனும் தேவஸ்தானம் குழுவின் உறுப்பினர் ஆகியுள்ளார். இவர் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திராவிலும் சிமெண்ட் தொழில் நடத்திவருகிறார். அதன்பேரில் அவர் ஆந்திர அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளராக முன்பு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் தேவஸ்தான குழுவின் உறுப்பினராக இருந்தவர் சேகர் ரெட்டி. அப்போதைய தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்துவந்தார். வழக்கமாக அண்டை மாநில முதல்வர்களிடம் தங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், ஜெயலலிதா தனது செயலாளர்கள் மூலமாகத்தான் தகவல் தெரிவிப்பார். ஆனால், சேகர் ரெட்டிக்காக ஜெயலலிதாவே நேரடியாக சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கிணங்க சேகர் ரெட்டிக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட பிறகு, உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தற்போது அவருக்கு சிறப்பு அழைப்பாளர் அந்தஸ்தை தேவஸ்தானம் அளித்துள்ளது.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon