மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

காஷ்மீரில் காணாமல் போனவர்கள் நிலவரம்!

காஷ்மீரில் காணாமல் போனவர்கள் நிலவரம்!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு வரைவு சட்டம் நீக்கப்பட்ட பின், தினத்திற்கு 6 என்ற வீதம் 250க்கும் மேல் ஹேபியஸ் கார்ப்பஸ் எனும் ஆட்கொணர்வு மனுக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேல் ஜம்மு காஷ்மீரில் தொலைதொடர்பு மீதான கட்டுப்பாடு, தகவல் தொடர்பு முடக்கம், அமைதியாக மக்கள் ஒன்று கூடுதல், உள்ளூர் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கைது செய்தல் என பலவிதமான கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், 250 ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் காஷ்மீரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மனுக்கள், சட்டத்தின் மூலம் ஒரு நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவதை அல்லது சிறையில் அடைக்கப்படுவதைப் புகாரளிக்க முடியும். நேற்று(செப்டம்பர் 19) வரை 252 ஹேபியஸ் கார்ப்பஸ் மனுக்கள் ஸ்ரீநகர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சிறப்பு வரைவு நீக்கப்பட்ட பின்பு, பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்(PSA) கீழ் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் காஷ்மீர் முன்னாள் மாநில முதல்வர் ஃபரூக் அப்துல்லா மதிமுக மாநாட்டுக்கு வர முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னரே அவர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தகவல்தொடர்பு மோசடி மற்றும் பரவலான தடுப்புக்காவல்களுக்கு இடையில், சாதாரண் மக்கள் உதவியைப் பெறுவதற்கான கடைசி இடமாக நீதிமன்றங்கள் பார்க்கப்படுகின்றன. இச்சட்டத்தின் கீழ் 290 முதல் 4000 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த வழக்குகளை கையாள்வதில் ஸ்ரீநகர் நீதிமன்றம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றது. ஏறக்குறைய 150 மனுக்கள் சேர்க்கை கட்டத்தில் உள்ளன, 85 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன, 20 வழக்குகளில், வழக்கின் நிலை இன்னும் அறியப்படவில்லை. ஆனால், இது குறித்து இந்திய அரசாங்கம் தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon