மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சிலப்பதிகாரத்தில் கெத்து, வெச்சு செய்வேன்: அமைச்சர்

சிலப்பதிகாரத்தில் கெத்து, வெச்சு செய்வேன்: அமைச்சர்

கெத்து, வெச்சு செய்வேன் உள்ளிட்ட வார்த்தைகள் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டவைதான் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழில் வெளியாகும் பிரபல நாயகர்களின் திரைப்படங்கள் கெத்து, வெச்சு செய்வேன் என பன்ச் வசனங்கள் இல்லாமல் வெளியாவதில்லை. குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையும் இதுபோன்ற வசனங்கள் தற்போது பேச்சு வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், இவையெல்லாம் கொச்சை சொற்கள் என தமிழ் ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ் இணைய வளர்ச்சிக் கழகத்தின் விழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்றது. அதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். விழாவில் பேசிய பாண்டியராஜன், “ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள்தான். கெத்து, வெச்சு செய்வேன் போன்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. இன்றைய இளைஞர்கள் அதனை தெரிந்தோ தெரியாமலோ தற்போது பயன்படுத்திவருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “உலகத்திலுள்ள உயர்தனி செம்மொழிகளில் தமிழ், சீன மொழிகளைத் தவிர மற்ற மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. தமிழர்கள் தொழில் துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளில் சாதனை படைக்கிறார்கள். ஆனால், படைப்புகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் இல்லை. அதற்கான தமிழ்ப் பெயர்களை உருவாக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள்தான் சொற்போர் வீரர்கள்.

முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது போல, தமிழ்க் காப்பு போராட்டம் நடத்த வேண்டிய காலகட்டம் இது. அதனால்தான் இளைஞர்களைத் தேடி சென்றுகொண்டிருக்கிறோம். இணையத் தகவல் தொடர்பில் தமிழ் மொழியை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்யப்படுவதால் மட்டுமே தமிழ் மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்” என்று பேசினார்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon