மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

சமூக வலைதளங்களில் தவறான தகவல்: யார் பொறுப்பு?

சமூக வலைதளங்களில் தவறான தகவல்: யார் பொறுப்பு?

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளைமெண்ட் ரூபின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுபோன்று முகநூல் நிறுவனத்துக்கு எதிராக நாட்டில் வேறு சில உயர் நீதிமன்றங்களிலும் வழக்கு உள்ளது. எனவே அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று முகநூல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சமூக ஊடக கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா, அதை எங்களிடம் தெளிவுப் படுத்துங்கள் என்று தெரிவித்தது. மேலும் இதுதொடர்பான வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 20) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன் சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மக்கள் கருத்துகளை பகிர ஒரு தளம் அமைத்துக் கொடுத்துவிட்டு அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்குப் பொறுப்பு ஏற்க முடியாது என்று சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு உலக அளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இந்தியச் சட்டத்தை அந்நிறுவனம் பின்பற்ற வேண்டும். சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. காட்சி ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் சில அமைப்பு இருப்பது போல சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த என்ன அமைப்பு இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசுத் தரப்பில், சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறிந்து தடுக்கவும் புதிய சட்டம் இயற்ற இருப்பதாகவும், மத்திய அரசின் இறுதி முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், முகநூல் மற்றும் ட்விட்டர் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவது போல் வாட்ஸ் அப் நிறுவனம் வழங்குவதில்லை என்று கூறப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon