மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

அமைச்சருக்கு எதிராக குவியும் புகார்!

அமைச்சருக்கு எதிராக குவியும் புகார்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சென்னை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியர் அல்ல என்று குறிப்பிட்டார். மேலும், “ ராகுல் காந்தியின் தாயும் இத்தாலி. அவருடைய தாய்மாமனும் இத்தாலி. பிறகு எப்படி ராகுலை இந்தியர் என்று சொல்ல முடியும்? ராகுல் காந்திக்கு யார் மடியில் மொட்டை போட்டார்கள்? சட்டப்படி ராகுல் காந்தி இந்தியர்தான். ஆனால், பிரச்சினைகள் அடிப்படையில் அவரை இந்தியராக எங்களால் பார்க்க முடியாது” என்று பேசியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவருடைய உருவபொம்மையையும் எரித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியிலுள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 20) சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில், “சோனியா காந்தி, ராகுல் காந்தி பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகளை எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ளார். தமிழக அரசின் அமைச்சராக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு அரசியலமைப்புப்படி பதவி வகிக்கக் கூடிய ராஜேந்திர பாலாஜி, பதவிப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிராகப் பேசி வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருப்பதற்குத் தகுதி இல்லாதவர் என்பதை அவரது பேச்சு காண்பிக்கிறது என தெரிவித்துள்ள ராஜசேகரன், “கண்ணியக் குறைவாகப் பேசி வரும் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறாகப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசுதல் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் போன்ற குற்றச்செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதுபோலவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொண்டு அவரை கைது செய்ய வேண்டும் என ஈரோடு மாநகர காவல் ஆணையரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே கமலை சப்பாணி என்றும், நாக்கை அறுப்பேன் என்றும் பேசியதற்காக ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தமிழகத்தின் பல இடங்களில் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon