மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

இடைத்தேர்தலில் முதல்வர் மகள்?

இடைத்தேர்தலில்  முதல்வர் மகள்?

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறப்போகும் இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக முதல்வர் நாராயணசாமியின் மகளை நிறுத்தப்போவதாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாஹி, ஏனாம், காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் 30 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற தொகுதியும் அடங்கியுள்ளன.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில், 2016-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் சட்டமன்ற சபாநாயகராகப் பதவி வகித்துவந்தார்,

சமீபத்தில் நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்தியலிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி காலியானது என்று அறிவிக்கப்பட்டது.

ஓரிரு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாகவுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவிக்கப்போகிறது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் காமராஜர் நகர் தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக -பாஜக கூட்டணியில் தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். பாஜக வேட்பாளராகக் கண்ணனை அறிவிக்க பாஜக தலைமை ஆலோசனை செய்துவருவதாகத் தகவல்கள் வருகின்றன.

காங்கிரஸ் கட்சி சார்பான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் மூத்த அமைச்சருமான நமச்சிவாயத்திற்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் கடுமையான போட்டி நடைபெற்றுவருகிறது. முதல்வர் நாராயணசாமி தனது மகள் விஜயகுமாரியை காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்த முடிவு செய்திருக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் முதல்வரின் மகளை கொண்டுவருவதற்கு கட்சியில் எதிர்ப்புகள் வருவதாக இருந்தால், தனக்காக நெல்லித் தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமாரை நிறுத்தலாமா என்றும் ஆலோசித்து வருகிறார் நாராயணசாமி.

அதேநேரம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவராகவும், நியமன எம்.எல்.ஏ.வாகவும் இருந்த அண்ணாமலை ரெட்டியார் மகன் ஜெயக்குமாரை நிறுத்த முடிவு செய்திருக்கிறார். காமராஜர் தொகுதியில் ரெட்டியார் சமூக வாக்குகள் அதிகமாக இருக்கிறது அடுத்தபடியாக வன்னியர் சமூக வாக்குகளும் சிறுபான்மையினர் வாக்குகளும் உள்ளதால் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரை வேட்பாளராக முடிவுசெய்துள்ளார் நமச்சிவாயம். மேலும் தேர்தல் செலவுகளை கவனித்துக்கொள்ளும் அளவுக்குப் பணபலமும் ஜெயக்குமாரிடம் உள்ளது என்கிறார்கள்.

முதல்வரின் மகள் விஜயகுமாரி நாடார் கிராமணி சமூத்தைச் சேர்ந்தவர், ஜான்குமார் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரையும் முதல்வர் பரிந்துரை செய்யவுள்ளார்.

டெல்லி தலைமை, கட்சியின் தலைவர் நமச்சிவாயம் பரிந்துரை செய்துள்ள வேட்பாளரை அறிவிக்குமா அல்லது முதல்வர் பரிந்துரை செய்துள்ள அவரது மகளை வேட்பாளராக அறிவிக்குமா என்பதே புதுச்சேரி காங்கிரஸுக்குள் இப்போது நடக்கும் பட்டிமன்றம்!

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon