மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

தாய்லாந்தில் பொன்னியின் செல்வன்

தாய்லாந்தில் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட படப்படிப்பு குறித்த முக்கியமான செய்திகள் வெளியாகியுள்ளது.

செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிவருகின்றன. கல்கியின் வரலாற்றுப் புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னத்துடன் லைகா நிறுவனம் கைகோர்த்துள்ளது. அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகவிருக்கிறது இப்படம்.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இப்படத்தில் நடிக்கப் போவதாக பேசப்பட்டுவந்தன. இருப்பினும் மணிரத்னம் இயக்கத்தில் இதற்கு முன் இணைந்து நடித்த ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதிசெய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டிவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த திட்டமிருக்கிறார் மணிரத்னம். 100 நாட்கள் கொண்ட ஒரே ஷெட்யூலில் படத்தின் முக்கியமான பாகங்களை தொடர்ந்து படமாக்க தயாராகி வருகிறது இப்படக்குழு. அமரர் கல்கியின் வரலாற்றுப் புனைவான இந்த பொன்னியின் செல்வனை தாய்லாந்தின் அடர்ந்த காடுகளுக்குள் படமாக்கவுள்ளார் மணிரத்னம்.

இதற்கான லொகேஷேன்களை தாய்லாந்து காடுகளில் சமீபத்தில் முடிவு செய்த இயக்குநர், படத்தில் நடிக்கும் நடிகர்களிடமும் அதற்கான கால்ஷீட்டை சரி பார்க்கச் சொல்லியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க எப்போதும் ஆர்வமாக இருக்கும் நடிகர்கள், உடனடியாக ஒப்புதல் அளித்திருக்கின்றனர். இதனால் உற்சாகமாகியுள்ளார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் முதல் கட்டப் படப்பிடிப்பை தாய்லாந்தில் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

மணிரத்னமுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை குமாரவேல், சிவா ஆனந்த் ஆகியோர் எழுதியுள்ளனர். சிவா ஆனந்த் மணிரத்னமுடன் தொடர்ந்து இணைந்து வருபவர். கடல், ஓ காதல் கண்மணி, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார் இவர்.

விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறது படக்குழு.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon