மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

தலைமை நீதிபதி வழக்கு தொடரட்டும்: நீதிபதிகள்!

தலைமை நீதிபதி வழக்கு தொடரட்டும்: நீதிபதிகள்!

தலைமை நீதிபதி பணியிட மாற்றம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை, 3 நீதிபதிகளை உள்ளடக்கிய மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தஹில் ரமணி தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும் விளக்கம் அளித்தது.

தலைமை நீதிபதியின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் முறையிட்டார். அதில், கொலிஜியம் குழுவின் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும். தஹில் ரமணியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிப்பதற்கு குடியரசுத் தலைவரின் செயலாளருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 20) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசியலமைப்புச் சட்டம் 222ஆவது பிரிவு, நீதிபதிகளை இடமாற்றம் செய்யலாம் என்று சொல்கிறதே தவிர, தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்வது குறித்து எதுவும் சொல்லவில்லை. நீதிபதிகள் இடமாற்றத்தை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் இணைந்து முடிவெடுக்க வேண்டும். கொலிஜியம் மட்டும் கூடி முடிவெடுக்கக் கூடாது. பணி ஓய்வுபெற இருந்த நிலையில் தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்தது நியாயமற்றது” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இடமாற்றத்தை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிபதிதான் வழக்கு தொடர முடியும் என உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளதாகவும், அவ்வாறு இருக்க எதன் அடிப்படையில் வழக்கு தொடர்ந்தீர்கள் என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திருத்தி எழுத முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், “தலைமை நீதிபதியும் நீதிபதிகளும் சமமாகத்தான் கருதப்படுகிறார்கள். நிர்வாக ரீதியாக செயல்படும்போதுதான் தலைமை நீதிபதியாக அவர் மாறுகிறார்” என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா அல்லது இல்லையா என்பது குறித்த தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon