மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

மோடி, அம்பானி, டெல்டா: காப்பான் பேசும் ‘கரண்ட்’ அரசியல்!

மோடி, அம்பானி, டெல்டா: காப்பான் பேசும் ‘கரண்ட்’ அரசியல்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் காப்பான்.

காப்பான் ஒரு வணிக ரீதியான திரைப்படம் என்பதையும் கடந்து, இன்று நடக்கக்கூடிய சென்சிட்டிவான அரசியல் விஷயங்களை படத்தின் முக்கியமான பேசுபொருளாகக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரதமரைக் கொல்லும் கார்பரேட்

காப்பான் படத்தில் பாரதப் பிரதமராக நடித்திருப்பவர் மோகன்லால். அனுபவமும் ஆளுமையும் கொண்ட இவரது கதாபாத்திரம், வழக்கமாக சினிமாக்களில் காட்டப்படும் பெயருக்கு வந்து செல்லும் பிரதமராக இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் அலுவல்கள், முக்கிய முடிவுகள் எடுக்கும் போது ஏற்படும் நெருக்கடி, பாதுகாவலர்களிடம் அடிக்கும் ‘ஜோக்’ என இன்னும் கொஞ்சம் பிரதமர் பிம்பத்தை நெருங்கியிருக்கிறது காப்பான்.

நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் கார்ப்பரேட் நிறுவனரான பொமன் ஈரானியின் அபாயகரமான திட்டத்தை பிரதமர் எதிர்க்கிறார். மேலும் அவரது நிறுவனத்தை முடக்கப் போவதாகவும் எச்சரிக்கிறார். அதனால் கார்ப்பரேட் முதலாளி, பிரதமர் மோகன்லாலை தீவிரவாதியை வைத்து தீர்த்துக் கட்டுகிறார். அதுவும் காஷ்மீரில் வைத்து!

வழக்கமாக தமிழ் சினிமாவில், பிரதமர் என்ற கதாபாத்திரமே நமக்கு மிகவும் அன்னியமாக இருக்கும். பக்கத்து நாட்டின் மீது போர் தொடுக்க, வீர தீர சாகசம் செய்த நாயகனை பாராட்ட என படத்தின் முக்கியமான காட்சிகளிலோ அல்லது கிளைமாக்ஸிலோ தான் இதுவரை வந்த பிரதமர்கள் தலையைக் காட்டியிருக்கிறார்கள். காப்பானில் படத்தின் கதை பிரதமரைச் சுற்றியே பெரும் பகுதி நிகழ்கிறது.

அதே சமயம், பிரதமர் எனும் சித்திரத்தை அவ்வளவு சீக்கிரம் உடைபடாமல் காப்பாற்றி வந்த சினிமாவில் முதன் முறையாக ஒரு பிரதமர் கொல்லப்படுவதை படத்தின் முக்கியமான கட்டத்தில் வைத்து கதையை துணிச்சலாக நகர்த்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

மோடி - மோகன்லால்

படத்தில் மோகன்லாலின் கதாபாத்திரம் அப்படியே பிரதமர் நரேந்திர மோடியின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாத தாக்குதலின் போது முக்கியமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டிய மோகன்லால், ’நூறு பேர் வாழணும்னா ஒருத்தர் சாகுறதுல தப்பில்லை. அதைத்தான் மனுதர்மம் சொல்கிறது, அதுதான் மனுஷ தர்மமும் கூட’ என வசனம் பேசுகிறார். தியேட்டர் ஸ்கீரினில் ‘லைவ்’ என எங்காவது ஓடுகிறதா என கண்கள் அலைபாய்ந்தது அச்சமயம்.

பிரதமர் மோடியின் நடை, உடை, பாவனை என அவரது சாயலிலேயே மோகன்லால் வலம் வருகிறார்; வெளிநாடு செல்கிறார்; அயல் நாட்டு வாழ் இந்தியர்களை, இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறார். அயல் நாடு என்பது காதலி போல, ஒரு நாள் போல மற்றொரு நாள் இருக்காது. ஆனால், தாய் நாடு என்பது தாயைப் போல என தேசப் பற்றைத் தூவுகிறார் பிரதமர் மோகன்லால்.

பொமன் ஈரானி - அம்பானி

பிரதமர் மோகன் லால், பொமன் ஈரானியை பற்றி சொல்லும் வசனங்கள், “நாட்டின் முக்கியமான பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது, இவரிடம் ஆலோசனை பெறுவோம். சொல்லப்போனால், இவர் சம்பளம் வாங்காத ஆலோசகர்”. அடுத்து, “செல்போன் விக்கறதுல இருந்து செருப்பு விக்கிற வரை அத்தனையும் நீங்க தான் செய்றீங்க. இன்னும் கோலமாவு மட்டும் தான் விக்கல”.

ஈரானி மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் போது, “அவர் மேல கைய வைச்சா நாட்டோட பொருளாதாரத்து மேலயே கைய வைக்கிற மாதிரி” என கேபினட்டில் இருந்து ஒரு குரல் வருகின்றது.

டெல்டா போர்

டெல்டா மாநிலங்கள் மீதான ஹைட்ரோ கார்பன் திட்டம், விவசாய நிலங்களை கைப்பற்றும் கார்பரேட், போராட்டக்காரர்களிடையே ரவுடிகளை நுழைத்து வன்முறை என திசை திருப்புவது என அன்றாடம் பார்க்கும் செய்திகளை சினிமாவாக கொண்டு வந்திருக்கிறது காப்பான்.

வளமாக இருக்கும் பகுதியை பாலைவனமாக மாற்ற இரக்கமே இல்லாமல் போடப்படும் திட்டங்கள், அதனை செயல்படுத்த கண்ணுக்கு தெரியாமல் விரியும் சதி வலைகள் என கார்பரேட் நிறுவனங்கள் நிலத்திற்காக எந்த எல்லை வரை செல்வர் என்பதை காப்பான் கூறியிருக்கிறது.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon