மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

திமுகவின் வியூகம் மாறுகிறதா? அதிமுக கேள்வி!

திமுகவின் வியூகம் மாறுகிறதா? அதிமுக கேள்வி!

ஆளுநரை ஸ்டாலின் சந்தித்தது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியால்தான் இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என்ற உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 20ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. இந்த நிலையில் ஆளுநரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று, நேற்று முன்தினம் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். இதற்கிடையே இந்தி மொழியைத் திணிக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என அமித் ஷாவும் விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, ஆளுநர் அளித்த உறுதிமொழியையும், அமித் ஷாவின் விளக்கத்தையும் ஏற்று திமுக அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை (செப்டம்பர் 19) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது ஆளுநரைச் சந்தித்திருப்பது ஏன்? திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதையே ஆளுநருடனான ஸ்டாலின் சந்திப்பு காட்டுகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தக்கூடிய அளவுக்கு திமுக தொண்டர்களுக்கே ஆர்வம் இல்லாததால்தான் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தி குறித்து பேசும் ஸ்டாலின் முதலில் தனது குடும்பத்தினர் கட்சியினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும்” என்று தெரிவித்தார்.

நாட்டுக்குப் பொதுமொழி தேவை என ரஜினிகாந்த் கூறிய கருத்து தொடர்பாக, “நாட்டுக்குத் தேவையான பொதுமொழி எது என்பதை ரஜினிகாந்த் விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon