5விமர்சனம்: காப்பான்

public

காலையில் ஆர்கானிக் விவசாயியாக இருக்கும் கதிரவன்(சூர்யா), இரவில் டபுள் ஏஜெண்டாக சதி வேலைகளில் ஈடுபடுகிறார். லண்டனுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் சந்திரகாந்த் நாயர்(மோகன் லால்) உயிருக்குத் தீவிரவாதிகளால் ஆபத்து இருக்கும் நிலையில், சூர்யாவும் அங்கே செல்கிறார்.

அங்கு நடக்கும் தாக்குதலில் இருந்து சூர்யா மோகன்லாலைக் காப்பாற்ற, அதன் பின்னர் தான் தெரிகிறது(!) சூர்யா ஒரு உளவுப்பிரிவு அதிகாரி என்று.

தன் உயிரைக் காப்பாற்றிய சூர்யாவை, மோகன்லால் தன் அருகிலேயே இருக்கும்படி எஸ்பிஜி (Special Protection Group) என்ற பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றுகிறார். பிரதமரின் உயிர் தொடர் அச்சுறுத்தலில் இருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பயங்கரவாதமும் அதிகமாகி வருகின்ற சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தையே தன் கைக்குள் வைத்திருக்கும் கார்பரேட் நிறுவனர் பொம்மன் இரானி, இதற்கு முடிவு கட்ட ஒரு ரகசிய திட்டத்தை பிரதமரிடம் முன் வைக்கிறார். அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பயணம் செல்லும் மோகன்லால் கொல்லப்படுகிறார். மோகன்லாலைக் கொன்றதன் நோக்கம் என்ன? சூர்யா அதற்கான காரணங்களை எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதி கதை.

முதல் பாதி முழுக்க துல்லியம் இல்லாமல் பயணிக்கும் காப்பான், மோகன் லால் இறந்ததும் என்னமோ சொல்ல வராங்களே என்பதைப் போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதி ஆரம்பித்த சில நிமிடங்களிலே தெரிந்து விடுகிறது, அது வெறும் பிரம்மை தான் என்று.

சூர்யா வழக்கம் போல பாத்திரத்துக்காக மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். மோகன்லால் பிரதமர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தோற்றத்தையும் ஆளுமையையும் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார். சூர்யா-மோகன்லால் இருவருக்கும் ஏற்படும் நெருக்கம் ரசிக்க வைக்கிறது.

ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு துறையில் நடக்கும் அரசியலை சென்சிட்டிவான விஷயமாக கையாளும் இயக்குநர் கே.வி.ஆனந்த், இப்படத்தில் விவசாயத்தின் மீது கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ‘பயோ வார்’ பற்றிப் பேசியிருக்கிறார். காப்பானின் அடிப்படைக் கதை என்றால் அதுதான். ஆனால், காப்பான் பிரதமரைக் காப்பானா? விவசாயத்தைக் காப்பானா? என்ற தடுமாற்றத்திலேயே எதிலும் முழுமையான கவனம் செலுத்தாமல் தடம் புரண்டுவிடுகிறது.

மற்ற படங்களில் இலை மறைவு காய் மறைவாய் கூறிய விஷயத்தை காப்பான் வெளிப்படையாகவே பேசுகிறது. தஞ்சாவூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைபெறுகிறது. வளமான டெல்டா பகுதியை பாலைவனமாக மாற்றும் திட்டங்கள் போடப்படுகிறது என காப்பான் இன்றைய நிலவரத்தை பேசுகிறது.

அது மட்டுமல்ல, பிரதமர் மோகன்லால் பேசும் வசனங்கள், அவரது தோற்றம், பொம்மன் இரானியின் கதாபாத்திரம் என அனைத்தையும் சமகால கதாபாத்திரங்களோடு தொடர்புபடுத்தி இன்னும் சென்சிட்டிவாக மாற்றுகிறார் இயக்குநர். அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால், அந்த ஜாலம் சினிமாவாக மாறியிருக்கிறதா என்றால், இல்லை.

சொந்த ஊரான தஞ்சாவூரில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் சூர்யாவிற்கு ஒரு பிராஜக்ட் வருகிறது. புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் நாகப்பட்டினம் இராணுவ முகாமுக்குள் செல்லும் சூர்யா, அங்கிருக்கும் பயோ-கெமிக்கல் ஆயுதங்களை அழிக்கிறார். பிரதமர் மோகன்லாலுக்கு முன்பிருந்த அரசு பக்கத்து நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில், அந்நாட்டுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த ஆயுதங்களாம் அவை.

வெளியே தெரிந்தால், இந்தியாவிற்கு தான் கெட்ட பெயர் என்பதால், அதனை புயல் சமயத்தில் வெடிக்கச் செய்து விட்டு களங்கத்தைப் போக்க சூர்யாவை அனுப்புகிறார் பிரதமர். இப்படித்தான் படம் முழுக்க எதைப் பற்றிச் சொன்னாலும் பெரிய அளவிலேயே சொல்லி விடுவதால் நமக்குள்ளும் ‘டமால் டுமீல்’ என்று வெடிக்கிறது.

அன்றாடம் கடக்கும் செய்திகளில் நடப்பதெல்லாம் வெளிப்படையாகவே காப்பானில் வந்தாலும், ஒன்றுக்கும் மற்றொன்றும் ஒட்டுதலே இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து வந்து செல்கிறது.

படத்தில் கதை, கிளைக் கதைகள் இருந்தாலும், எது கதை, எது கிளைக்கதை என்பதை அறியவே நேரம் எடுக்கிறது (படத்தில் அவ்வபோது சூர்யா தான் பிரதமரோ என சந்தேகம் ஏற்படுவது போல). அதற்குள் படமும் முடிந்து விடுவதால், வெளியே வரும் பார்வையாளன் படம் எப்படி இருக்கு?எதைப் பற்றிய படம்? போன்ற சாதாரண கேள்விகளுக்கும் தடுமாறத் துவங்குகிறான்.

படத்தில் லாஜிக் என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. இந்தியா மாதிரியான நாட்டில், ஒரு பிரதமருக்கு இரண்டு முறை கொலை முயற்சி நடந்த பின்னுமா எந்தப் பிரச்சினையும் அழுத்தமும் இல்லாமல் இருக்கும். அதுவும் மூன்றாவது முயற்சியில் பிரதமர் கொல்லப்பட்ட பிறகும்? (நல்லவேளையாக காஷ்மீரில் ரொம்ப நேரம் காப்பான் இல்லாதது சிறப்பு).

படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் செய்தி சேனல்களைப் பார்த்த பின்பு தான் ‘என்ன’ என்பதைப் போல முழிக்கிறார்கள், பிரதமர் உட்பட.

படத்தில் உழைத்த நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்து முடித்துள்ளனர். பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை மனதில் தங்கவே இல்லை. படத்தொகுப்பில் நிறைய இடங்களை வெட்டி எறிந்திருக்கலாம்.

காப்பான் இரண்டே முக்கால் மணி நேரங்களுக்கும் மேல், எந்த புதுமையும் இல்லாமல், நம் யூகிப்பையும் விட இன்னும் சுவாரஸ்யம் குறைவாக நடந்து முடிவதால் நம்மை யார் காப்பான்? எனக் கேட்க வைக்கிறது.

*லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கிறார். சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் ஈரானி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இசை: ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, படத்தொகுப்பு: ஆண்டனி.*

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *