மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: வெந்தய சாதம்

கிச்சன் கீர்த்தனா: வெந்தய சாதம்

பொதுவாக இந்துக்கள் ஆண்டு முழுவதுமே சில கிழமைகளைத் தேர்ந்தெடுத்து விரத வழிப்பாடு மேற்கொள்வது உண்டு. அப்படி ஆண்டு முழுவதும் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பார்கள். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என அழைக்கிறார்கள். 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருப்பதியில் இந்த மாதத்தில்தான் பிரம்மோற்சவம் நடைபெறும். இதேபோல பிற பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாதத்தில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். இந்தக் காலகட்டம் பெருமாளுக்குக் காணிக்கை, நேர்த்திக் கடன்களைச் செலுத்த உகந்தது. இந்த வெந்தய சாதம் செய்து பெருமாளுக்குப் படைத்து சாப்பிடுவது நம் உடல் நலனுக்கு ஏற்றது.

என்ன தேவை?

அரிசி - ஒரு கப்

வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)

நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியைச் சூடாக்கி அதில் வெந்தயத்தைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசியைச் சேர்த்து, தண்ணீர்விட்டு இரண்டு முறை நன்கு கழுவிக்கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில் அரிசி, வறுத்த வெந்தயம் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துகொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி மூடி வைத்து மூன்று விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். குக்கரில் ஆவி அடங்கிய பின் திறந்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் குக்கரைத் திறந்து நன்றாகக் கலந்து தேங்காய்த் துவையல் போட்டுப் பிசைந்து சாப்பிடவும்.

சிறப்பு

வெந்தயம் சமையலுக்குச் சுவை சேர்ப்பதோடு நார்ச்சத்தையும் அளிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயத்தை உணவில் கட்டாயம் சேர்ப்பது நல்லது. குழம்பில் சிறிதளவு சேர்ப்பதோடு நின்றுவிடாமல் அதை அரிசியோடு கலந்து சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது. இந்தச் சாதத்தில் வெந்தயத்துடன் தேங்காய்த் துருவல் சேர்ப்பதால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். விரதத்துக்கேற்ற சிறந்த உணவாகவும் அமையும்.

நேற்றைய ரெசிப்பி: தினை அரிசி தேங்காய்ப்பால் பொங்கல்

சனி, 21 செப் 2019

chevronLeft iconமுந்தையது