மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவுதான்: கே.எஸ்.அழகிரி

காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவுதான்: கே.எஸ்.அழகிரி

காந்திக்கும் பாஜகவுக்கும் இடையே துப்பாக்கி உறவுதான் உள்ளது என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரையை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் இன்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவுசெய்துள்ளோம். பாஜக எல்லாவற்றையும் புதிதாகவே செய்கிறது. யாருக்கு யார் செய்ய வேண்டும் என்று ஒரு பொருத்தம் வேண்டும். காந்தி பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடுவதில் என்ன பொருத்தம் இருக்கிறது.

காந்திக்கும் காங்கிரஸுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால் பாஜகவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு உண்டு. இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம். சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவினர் பங்கெடுத்தது கிடையாது. அதற்காக ஒரு நிமிடம் கூட அவர்கள் சிறையில் இருக்கவில்லை. ஆனால் காங்கிரஸின் ஜனநாயகம் அவர்களையும் அங்கீகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல் வெற்றிக்கு நாங்கள் கடுமையாகப் பணியாற்றுவோம். இடைத்தேர்தலில், பணம் மக்களைச் சென்று சேராது. சேவைதான் மக்களைச் சென்று சேரும். ஆகவே சேவையை முன்வைத்து இடைத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம். தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் அழைக்கவுள்ளோம். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் நிச்சயம் அழைப்போம்” என்று குறிப்பிட்டார்.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon