மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

தமிழ்நாட்டில் பவாரியா கும்பல்: காவல்துறை பதிலடி!

தமிழ்நாட்டில் பவாரியா கும்பல்: காவல்துறை பதிலடி!

நங்கநல்லூரில் 120 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ காலனி 2 ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (52). கிரானைட் தொழிலதிபரான இவர் சபரிமலைக்கு சென்றுவிட்ட நிலையில், அவரது மனைவியும், பிள்ளைகளும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற பின், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 சவரன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து உடனே பழவந்தாங்கல் போலீஸாருக்கு ரமேஷின் வீட்டார் தகவல் கொடுத்ததும், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் போலீஸார் விரைந்தனர். அப்போது அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 வடமாநில இளைஞர்கள் நேற்று சம்பவ தினத்தன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிவதும், ரமேஷின் வீட்டுச் சுவர் ஏறி குதித்ததும், பின்னர் கையில் ஒரு பையுடன் மீண்டும் சுவரேறி வெளியேறும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு, வடமாநில கொள்ளையர்களை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், கொள்ளையடித்த நகை, பணத்துடன் பழவந்தாங்கலில் இருந்து ரயில் ஏறி எழும்பூர் சென்ற பின் அங்கிருந்து மத்திய பிரதேச மாநிலத்துக்கு கொள்ளைக் கும்பல் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய பிரதேச மாநில போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு, தமிழக காவல் துறையினர் கொடுத்த ஆதார, அடையாளங்களைக் கொண்டு இந்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் இந்த பவாரியா கும்பலை கைது செய்துள்ளது.

மேலும் இந்தக் கொள்ளையர்களை தமிழகம் கொண்டுவர தாம்பரம் தனிப்படை போலீஸ் மத்திய பிரதேசத்திற்கு விரைந்ததாக முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் இது குறித்து கூறியதாவது, “பவாரியா கும்பலை பிடிப்பது என்பது மிகவும் கடினமான வேலை என்றும் பவாரியா கும்பலை பிடித்ததற்காக சென்னை காவல் ஆணையர் மற்றும் காவல்துறை குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் தெரிவித்துள்ளார். மேலும் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதே பாரம்பரிய தொழிலாக கொண்டவர்கள் பவாரியா சமூகத்தினர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 22 செப் 2019

அடுத்ததுchevronRight icon