மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

கோமாளி இயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசு!

கோமாளி இயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசு!

கோமாளி படத்தின் இயக்குநருக்குத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றைப் பரிசளித்து மகிழ்வித்து உள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கோமாளி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். 90களில் கோமாவுக்குச் செல்லும் ஒருவர் 16 ஆண்டுகள் கழித்து கண் விழிக்கும்போது ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாகச் சொல்லும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 21) தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்குப் புதிய ஹோண்டா சிட்டி கார் ஒன்றைப் பரிசளித்து மகிழ்வித்து உள்ளார். அப்போது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மகன் ஆரவ்வும் உடன் இருந்துள்ளனர்.

இதுகுறித்து பிரதீப் ரங்கநாதன், “ஐசரி கணேஷ் இப்படி ஓர் இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்துக்காகத் தேவையான அனைத்து உதவிகளையும் ஐசரி கணேஷ் செய்தார். இந்தப் படத்தில் நான் ஒரு காட்சியை வைக்க தவறிவிட்டேன். 90களின் குழந்தைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவேன் என்று பெற்றோர்கள் ஊக்கம் அளிப்பார்கள். இதை நான் படத்தில் காட்சிப்படுத்தத் தவறிவிட்டேன். ஆனால், தற்போது தேர்வு எழுதி வெற்றி பெற்ற எனக்குத் தந்தையைப் போன்று ஐசரி கணேஷ் கார் பரிசளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் நடித்த ஜெயம் ரவி காஜல் அகர்வால் சம்யுக்தா யோகி பாபு உள்ளிட்ட அனைவருக்கும் பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon