மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

திருவள்ளுவர் பல்கலையில் ஊழல்: துரைமுருகன்

திருவள்ளுவர் பல்கலையில் ஊழல்: துரைமுருகன்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல் நடப்பதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் சட்டக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதியை உடனடியாக திறக்கக்கோரி அக்கல்லூரி மாணவர்கள் அண்மையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அந்த விடுதியைச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் நேற்று (செப்டம்பர் 21) ஆய்வு செய்தார். அப்போது, விடுதி திறக்கப்படாதது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு எலெக்ட்ரிக் வேலைகள் நடந்து வருவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 2017ஆம் ஆண்டு கட்ட அனுமதி வழங்கப்பட்ட இந்த விடுதி கட்டடம் இதுவரை திறக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய துரைமுருகன், “இதுகுறித்து ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி பொதுப்பணித் துறை அதிகாரியிடம் கண்டிப்புடன் கூறினேன்” எனத் தெரிவித்தார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடர்பாகப் பேசிய துரைமுருகன், “ஒரு பல்கலைக்கழகத்தைக் கொண்டுவருவது சாதாரணமானதல்ல. ஆனால், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை காட்பாடி தொகுதியில் கொண்டுவந்தேன். இன்றைக்கு அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. புதிய துணைவேந்தர், பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதிவாளரிடம் பேசிய பிறகும் எந்தத் தகவலையும் அவர்கள் என்னிடத்தில் கொண்டு வருவதில்லை. அங்கு ஊழல்கள் ஊற்றெடுப்பதாக எனக்குத் தகவல் வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “எந்தப் பணியையும் பொதுப்பணித் துறைதான் செய்ய வேண்டும். ஆனால், தனிப்பட்ட நபர்களைக் கொண்டுவந்து கமிஷன் நோக்கத்தில் வேலைகள் நடப்பதாகத் தகவல் வந்துள்ளது. இதுகுறித்த பிரச்சினையை விரைவில் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்கள் என்று மமதையுடன் அவர்கள் செயற்பட்டால் மக்களைத் திரட்டி ஊழல்களைச் சந்தி சிரிக்க வைப்பேன்” என்று எச்சரித்தார்.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon