மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

பார்வைற்ற பாடகருக்கு இமான் அளித்த வாய்ப்பு!

பார்வைற்ற பாடகருக்கு இமான் அளித்த வாய்ப்பு!

சமூக வலைதளங்களை கலக்கி வரும் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தியின் கண்ணான கண்ணே பாடலை பார்த்த அதன் இசையமைப்பாளர் இமான், அவருக்கு பாட வாய்ப்பளிப்பதாக கூறியுள்ளார்.

சமூக வலைதளங்கள் வீட்டுக்குள் மறைந்திருக்கும் பல திறமையாளர்களை வெளிகொண்டு வந்திருக்கின்றது. டிக்டாக், யூடியூப் சானல் என பல திறமையாளர்கள் இன்று சினிமாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவிலுள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மண்டல் என்ற பெண் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி, தற்போது அவர் பாலிவுட்டில் பாடகி ஆகியிருக்கிறார்.

இந்நிலையில், கண்பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அன்பும், கருணையும் கொண்ட அந்த இளைஞரின் மென்மையான குரல், யாருடைய நெஞ்சையும் கரைக்கும் வல்லமை கொண்டது. கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி பிறவியில் இருந்தே பார்வையற்றவர் ஆவார்.

திருமூர்த்தி பாடிய பாடலை தனது செல்போனில் படம்பிடித்த ஒருவர், இசையமைப்பாளர் இமானுக்கும், பாடகர் சித் ஸ்ரீ ராமுக்கும் டேக் செய்து ட்வீட் செய்துள்ளார். இதனைக் கண்ட இமான் திருமூர்த்தி குறித்த விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே அவருடைய தகவல்கள் இமானுக்கு கிடைக்க, “திருமூர்த்தி குறித்த தகவல் கொடுத்தோருக்கு நன்றி. விரைவில் அவரை பாட வைக்க உள்ளேன். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு” என தெரிவித்துள்ளார்.

திருமூர்த்திக்கு வாய்ப்பளித்த இமானுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon