மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

நாங்குநேரியைக் கேட்கும் மனோஜ் பாண்டியன்

நாங்குநேரியைக் கேட்கும் மனோஜ் பாண்டியன்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் இடைத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்தன. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை பிற்பகல் 3.30 மணி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 22) காலை 10 மணிக்கு விருப்ப மனுக்கள் வினியோகம் துவங்கியது. இதில், நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் விருப்ப மனு அளித்துள்ளார். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் நாஞ்சில் அன்பழகன், நாங்குநேரியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய விஜயகுமார் ஆகியோரும் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ஆர். லட்சுமணன் விருப்ப மனு அளித்துள்ளார்.

விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon