மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 செப் 2019

சிறப்புக் கட்டுரை: சென்னையிலும் க்ளைமேட் ஸ்ட்ரைக்!

சிறப்புக் கட்டுரை: சென்னையிலும் க்ளைமேட் ஸ்ட்ரைக்!

நரேஷ்

பெசண்ட் நகர் கடற்கரை சாலை பாதங்களாலும் பதாகைகளாலும் நிரம்பியிருந்தது. வண்ண வண்ண பதாகைகள், பாதங்கள். எல்லா பதாகைகளும் மட்கக்கூடிய பொருட்களால் வண்ணம் தீட்டப்பட்டவை.

ஆங்காங்கே மக்களின் கூக்குரல்களும் பாடல்களும் கடல் வரை எதிரொலித்தது. இது கொண்டாட்ட நிகழ்வல்ல, போராட்ட நிகழ்வு. இன்று (22-09-2019) காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த போராட்ட நிகழ்வானது, இனி ஒவ்வொரு நாளும் நொடியும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உலக நாடுகளின் தலைவர்கள் உணர வேண்டும் என்பதற்காக உலகம் தழுவிய புறக்கணிப்பு போராட்டத்தை, க்ரேட்ட துன்பர்க் என்ற ஒற்றைச் சிறுமி ஒருங்கிணைத்தார். உலகம் முழுவதிலும் இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் பெற்றோருடன் கல்வி நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை புறக்கணித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று (20-09-2019) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் அஸ்ஸாம், பெங்களூர், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் க்ரேட்ட துன்பர்க்-க்கு ஆதரவாக மாணவர்கள் களம் இறங்கினர். டெல்லியில் கங்கனா சூட் என்ற சிறுமி தனது தேர்வுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அஸ்ஸாமில் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்களும் பதாகைகளை ஏந்தி போராடினர்.

சென்னையில் பூவுலகின் நண்பர்கள் குழுவுடன் இணைந்து 'Global Strike for future', 'Fridays for future', 'Vettiver collective', 'Reap benefit' ஆகியோர் நடத்திய இந்த போராட்டத்தில் சென்னையில் இருக்கும் பெரும்பாலான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். நித்தியானந்த் ஜெயராமன், பாரதி கண்ணன், பூவுலகு சுந்தர்ராஜன், பேரா.முருகவேள், பணை சதீஷ், வின்சண்ட் என்று ஏராளமானோர் தனி தனிக்குழுக்களாக விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

*”சொல்லுங்க எம்மக்கா ... இப்போ சொல்லுங்க!

ஹே..ஹே...

உரக்க கத்துவோம் யார் காரணம் உரக்க கத்துவோம்!

ஹே.. ஹே..”*

என்று ஹிப் ஹாப் பாடல் பாடப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தது கூட்டம். அமேசான் காடுகள் பற்ற வைக்கப்பட்டதற்கு பின்னாலுள்ள அரசியல், புவி சூழல் சீர்கேடு, கழிவு மேலாண்மை என்று மனிதர்கள் புவிக்கு ஏற்படுத்தி வரும் ‘தீ விளைவுகளுக்கு’ யார் காரணம் என்று பாடலின் மூலம் கேள்வி எழுப்பட்டபோது, கூட்டமே சேர்ந்து ‘நாமதான் காரணம்’ என்றது. தவறுகளை உணர்ந்த தலைமுறை நிச்சயம் மாற்றத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைக்கும். அதிலும் பாடலின் போது காட்டப்பட்ட ஒரு பதாகையின் வாசகம் அனைவரையும் ஈர்த்தது. அமேசான் காடுகள் எரிவதை காட்சிபடுத்தியிருந்த அந்த பதாகையில் இப்படி எழுதியிருந்தது, “இது தீ அல்ல.. தீவிரவாதம்!”

கூட்டத்தில் பலரும் பேசியதை ஒரே உரையில் முடித்துவிடலாம். ``உலக தலைவர்கள் அனைவரும் அறிவியலுக்குப் பின்னால் துணை இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு தலைவர் பதவியிலேயே நீடிக்க விரும்புகின்றனர். அவர்களுக்கு பருவநிலை மாற்றம் குறித்த எந்த கவலையும் இல்லை. அவர்களை நாம் கேட்கவைக்க வேண்டும். நம் கோரிக்கைகளைத் தலைவர்கள் ஏற்று, நடைமுறைப் படுத்துவதற்காகவே நாம் இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

பாதுகாப்பான எதிர்காலத்தில் வாழ நமக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. அந்த பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே நாம் கேட்கிறோம். நாம் மாற்றத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நம்மை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது” என்று க்ரேட்டா துன்பேர் தனது போராட்டத்தின்போது பேசிய இந்த உரையின் நீட்சியாகவே இந்த போராட்டத்தில் ஒலித்த குரல்கள் இருந்தன. கூடவே சென்னை, தமிழகம், இந்தியா என்று நம்மை சுற்றிய சூழல் குறித்த வாதங்கள் ஒட்டியிருந்தது. வார்த்தைகளும் மொழியும் வேறு வேறானாலும், நோக்கமும் செயலும் ஒன்றே!

ஹிப் ஹாப் பாடல் பாடி முடிக்கும்போது, மூன்று சிறுவர்கள் மேடையேறினார்கள். “நீர்நிலைகள் பற்றி நமக்கு என்ன தெரிந்திருக்கிறது? சதுப்பு நிலங்கள் குறித்த அக்கறை நமக்கு இருக்கிறதா? சதுப்பு நிலங்களில் கட்டுமானங்கள் எழுப்புவது குழந்தைகளான எங்களின் வளர்ச்சிக்காகத்தான் என்று கூறி எங்கள் மீது பாவத்தை திணிக்காதீர்கள். சதுப்புநிலத்தை அழித்துதான் ஒரு கட்டுமானம் எழுப்பப்படுமேயானால், அந்த கட்டுமானமே எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு எதிர்காலம்தான் தேவை. உங்கள் தவறுகளை இப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றனர்.

ஆங்காங்கே கழிவு மேலாண்மை, சூழல் சட்டதிட்டங்கள் குறித்து மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. நிறைவில் பேசிய பூவுலகு சுந்தர்ராஜன், “எங்கள் தலைமுறைக்கு பிறகு யார் இந்த போராட்டத்தை முன்னெடுக்கப்போகிறார்கள் என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். இப்போது இவ்வளவு திரளான இளைஞர் கூட்டத்தை பார்த்தபிறகு எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இது ஒருநாள் போராட்டமல்ல. ஒவ்வொரு நாளும் தொடரவேண்டிய போராட்டம். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள். உங்களுக்குள் விதை விதைத்தாயிற்று. இன்று இரவு நாங்கள் நிம்மதியாக உறங்குவோம்.” என்றார்.

உறங்குங்கள் போராளிகளே! உறக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையும் வீரியமாக முளைக்கக் காத்திருக்கிறது!

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

ஞாயிறு 22 செப் 2019