மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

எண்ணெய் நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை!

எண்ணெய் நிறுவனங்களுடன்  மோடி ஆலோசனை!

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி ஹூஸ்டனில் 16 முன்னணி எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அரசு முறைப் பயணமாகப் பிரதமர் மோடி அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் (செப்டம்பர் 20) அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ (மோடி நலமா?) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் 50ஆயிரம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இன்றும் நாளையும் எரிசக்தி நகரமான ஹுஸ்டன் நகரத்தில், மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அதில் முதல் கட்டமாக முன்னணி எரிசக்தி துறை தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எரிசக்தி துறையில் இந்தியா தனது வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி இதில் விவாதித்ததாக மோடி தெரிவித்தார். இதில், அமெரிக்காவின் முக்கியமான 16 எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் மோடி.

இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனமும், அமெரிக்காவின் இயற்கை எரிவாயு நிறுவனமான டெலுரியனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. 50 லட்சம் டன் அளவுக்கு எல்என்ஜி வாயுக்கான முதலீடுகளை அளிப்பது குறித்து இந்த ஒப்பந்தத்தில் முடிவானது.

இது தொடர்பாக டெலுரியன் நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மெக் ஜென்டில் வெளியிட்ட அறிவிப்பில், " இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனத்துடன் பிரதமர் மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்தியாவின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியாளர் பெட்ரோநெட் நிறுவனம். இந்நிறுவனம் திரவ இயற்கை எரிவாயுவைக் குறைந்த விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால், எதிர்காலத்தில் வர்த்தகம் அதிகமாகி பிரதமர் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட உதவி செய்வோம். பிரதமர் மோடியின் முன் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது எங்களுக்குப் பெருமையானது" எனத் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon