மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

விஜய் சொன்னது சரிதான்: ஆதரவளிக்கும் அமைச்சர்!

விஜய் சொன்னது சரிதான்: ஆதரவளிக்கும் அமைச்சர்!

நடிகர் விஜய் கூறிய கருத்து சரிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்தவர்களையும், லாரி டிரைவரையும் கைது செய்திருக்கிறார்கள். யார் யாரை எங்கு வைக்கவேண்டுமோ, அங்கு வைத்தால் இதுபோன்ற பிரச்சினை வராது என அதிமுகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் மதுரையில் இன்று (செப்டம்பர் 22) செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்கிறார்கள் மக்கள். அதனால் தான் எங்களை ஆட்சியில் வைத்துள்ளனர். எதிர்கட்சியை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்கிறார்கள். எனவே நடிகர் விஜய் சொன்ன கருத்து சரிதான். அதில் தவறு ஒன்றும் இல்லையே” என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், “நடிகர்கள் ஆயிரம் பேசுவார்கள். அவர்கள் பேசுவதையெல்லாம் நாம் அரசியலாக பார்க்க முடியாது. ஒரு திரைப்படத்தை பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறார்கள். அந்த படம் விற்பனையாக வேண்டும் என்பதற்காகவும் மக்களிடம் சேர வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்று பேசுகிறார்கள். தனது படம் வரும்போது விஜய் இதுபோன்று பேசுவதுண்டு. பிறகு முதல்வர் கேட்டால், தான் அதுபோன்ற எண்ணத்தில் பேசவில்லை என்று கூறிவிடுவார்கள். எனவே அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்றும் விளக்கினார்.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon