மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

சட்டவிரோதக் கும்பலின் அழுத்தம்: காத்திருப்போர் பட்டியலில் டிஎஸ்பி!

சட்டவிரோதக் கும்பலின் அழுத்தம்: காத்திருப்போர் பட்டியலில் டிஎஸ்பி!

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த கும்பலின் அழுத்தம் காரணமாக விழுப்புரம் டிஎஸ்பியாக இருந்துவந்த திருமால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் திருமால். காவல் துறை பணியில் சேர்ந்தால் தவறுகளைத் தட்டிக்கேட்கலாம் என்ற எண்ணத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி 1996இல் நேரடியாக உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வாகினார். 10 வருடங்கள் தென்மாவட்டங்களில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தார். பின், ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். அதில் ஏழு வருடங்கள் சிறப்பாகப் பணியாற்றினார்.

2016ஆம் ஆண்டு டிஎஸ்பி பதவி உயர்வில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டம் டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றார். அங்கு பதவி வகித்த இரண்டரை வருடத்தில் அதிகளவில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்தார். முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார். சாராயம் மற்றும் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் விற்பனையைத் தடுத்து பொதுமக்கள் மனத்தில் பாராட்டைப் பெற்றார்.

இதையடுத்து, மாவட்டத் தலைநகரான விழுப்புரத்துக்கு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட திருமால், அங்கு தனது அதிரடிகளைத் தொடர்ந்தார். விழுப்புரம் பகுதிகளில் தாறுமாறாக நடந்துகொண்டிருந்த மணல் கொள்ளைகளைத் தடுத்தார். சட்டவிரோதமாக சாராயம், போலி மதுபானப் பாட்டில்கள் மற்றும் லாட்டரிச் சீட்டு விற்பனைகளுக்கு முடிவு கட்டினார். திருமாலின் மெச்சத் தகுந்த பணிகளைப் பாராட்டி, அண்மையில் அவருக்குக் குடியரசுத் தலைவர் விருதும் வழங்கப்பட்டது.

திருமால் தனக்குக் கீழுள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்களை அழைத்து, “நான் நேர்மையாக இருக்கிறேன். நீங்களும் நேர்மையாக இருங்கள். இருக்கும் வரையில் மக்களுக்கு நல்லது செய்யுங்கள். தயவுசெய்து நான் இருக்கும் வரையில் நேர்மையாகப் பணியாற்றுங்கள்” என்றுதான் கூறுவார். இதுவே திருமாலுக்குப் பெரிய நெருக்கடியாக உருவானது. சட்டவிரோத மதுபானம் விற்றவர்களால் வந்த வருமானம் திருமாலால் தடைபட்டதாக மற்ற அதிகாரிகள் கோபம் கொண்டனர்.

இந்த நிலையில்தான் மணல் கொள்ளையர்களும், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனைகள் செய்பவர்களும் ஒன்றுசேர்ந்து திருமலையை விழுப்புரத்திலிருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு, மாவட்டத்தின் வலுவான அரசியல் புள்ளியைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் என்னய்யா உனக்கு வருமான சரியாத்தானே வந்துகிட்டு இருக்கு என்று அந்த விஐபி கேட்க, “அண்ணே நைட்ல நிம்மதியா தூங்க விடமாட்டாரு. ஒரே ரெய்டுனு டார்ச்சர் பண்றாங்க” என்று புலம்பியிருக்கிறார்.

மேலும், “இந்த டிஎஸ்பியை உடனே மாற்றுங்கள். நம் கட்சிக்காரர்கள் அனைவரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எஸ்பியே அவர்மீது அதிருப்தியில்தான் இருக்கிறார். இதற்கு முன்பு இருந்த டிஎஸ்பியைக் கொண்டுவந்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. நம்ம பிசினஸ் தடையில்லாமல் நடக்கும்” என்று அனைவரும் ஒன்றுசேர்ந்து கூறியிருக்கிறார்கள். இதுபோலவே இதற்கு முன்பு இருந்த டிஎஸ்பி, தனிப்பட்ட முறையில் பெரிய அதிகாரிகளைச் சந்தித்து கவனிக்க வேண்டிய முறையில் கவனித்திருக்கிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சட்டவிரோதக் கும்பல்களின் அழுத்தத்தால் அந்தப் பட்டியலில் திருமாலின் பெயரும் இடம்பிடித்தது. நேர்மையாகப் பணியாற்றிய டிஎஸ்பி திருமாலுக்கு வேறு எங்கும் பணி வழங்காமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு உடனே ரிலீவாகச் சொல்லியும் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது.

திருமால், காவல் துறையில் மட்டுமல்ல; தனது வாழ்க்கையிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவர். கடைக்குப் போனாலும் பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வாங்க மாட்டார். எப்போதும் கையில் ஒரு துணிப்பை வைத்திருப்பார். அப்படிப்பட்ட நேர்மையானவரை, குடியரசுத் தலைவர் விருது பெற்றவரை, மணல் கடத்தல் கும்பலும், கள்ளச்சாராயக் கும்பலும் ஒன்றுசேர்ந்து மாற்றியிருப்பதும், அதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களே துணைபோய் இருப்பதும் தலைகுனிய வேண்டிய விஷயமாக இருப்பதாகக் கூறுகிறார்கள் சக இன்ஸ்பெக்டர்கள்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon