மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

ஒரே நாடு, ஒரே அட்டை: சிதம்பரம் வழியில் அமித் ஷா

ஒரே நாடு, ஒரே அட்டை: சிதம்பரம் வழியில் அமித் ஷா

"ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே ஒரு அட்டை மட்டுமே நம்மிடம் இருக்க வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி, திங்கட்கிழமையில் மாநில தலைநகரான சென்னையில், ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, “முன்மொழியப்பட்ட தனித்துவமான பல்நோக்கு தேசிய அடையாள அட்டைகள்(multi-purpose national identity cards) அனைத்து குடிமக்களுக்கும் 2010-2011க்குள் வழங்கப்படும்” என அறிவித்தார். இத்திட்டம் குறித்து அவர் மேலும் கூறியதாவது, “எந்தவொரு அரசாங்க சேவையை பெறும்போதும்; வங்கிக் கணக்குகளை புதிதாக திறக்கும் போதும்; தொலைபேசி இணைப்புகளைப் பெறுவதற்கும்; என இது போன்ற தனிப்பட்ட தேவைகளுக்காக குடிமக்களுக்கான அடையாளத்திற்கான பல சான்றுகள் தேவைப் படுகிறது. இத்தேவையை தணிக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு தனித்துவமான அடையாள ஆணையத்தை அமைத்துள்ளது” எனக் கூறினார்.

இந்நிலையில், தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று (செப்டம்பர் 23) மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமித் ஷா பேசும் போது, ‘பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் வங்கி கணக்குகள் போன்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் பல்நோக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான யோசனையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

அமித் ஷா கூறும் போது,“மக்கள் தொகை கணக்கெடுப்பு(சென்சஸ்) எவ்வாறு எதிர்கால திட்டமிடலுக்கு பயன்படுத்தப்படுகிறது, மேம்பாட்டு முயற்சிகள், நலத்திட்டங்கள் என்னென்ன என இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுக்கும் இது குறித்த நன்மைகளை எடுத்துரைக்கவேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவின் பயன்பாடு பல பரிமாணமானது. நாட்டின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இது இருக்கும்” எனக் கூறினார்.

நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இது ஒரு பெரிய புரட்சியாக இருக்கும் எனக் கூறிய அமித் ஷா, 2021ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள் மொபைல் ஆப் மூலம் சேகரிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் அவர், “ஒரு நபர் இறந்தால், மக்கள் தொகை தரவுகளில் இறந்த நபரில் தகவல் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதிகளுடன் ஒரு அமைப்பும் இருக்க வேண்டும். நகராட்சி வார்டுகள், சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவும்” என்று கூறினார்.

2009ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதே போன்ற பல்நோக்கு அடையாள அட்டை திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால், அதன் பிறகு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா அதே திட்டத்தை கூறியிருக்கிறார்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon