மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

திட்டமிட்டபடி "திட்டம் போட்டு திருடுற கூட்டம்" வருமா?

திட்டமிட்டபடி

அறிமுக இயக்குநர் சுதர் இயக்கத்தில் 2 மூவி பஃப் நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரித்திருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ‘கயல்’ சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், சாம்ஸ், டேனியல் ஆனிபோப் ஆகியோர் நடித்துள்ளனர். SDC பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.

இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று(செப்டம்பர் 23) சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ‘கயல்’ சந்திரமெளலி, “கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம்தான். இப்படம் எனக்கு அறிமுக படம். அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்” எனக் கூறினார்.

திட்டம் போட்டு ஒரு கும்பல் கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. இப்படத்தின் இயக்குநர் சுதர் கூறும்போது, “சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்” எனக் கூறினார்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்திற்கு எதிராக அனைத்து விநியோகஸ்தர்கள் சங்கங்களிலும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் என்ன?

இது தொடர்பாக, விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் விசாரித்த பொழுது, இப்படத்தை தயாரித்த 2 மூவி பஃப் நிறுவனம், சிவலிங்கா படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட வகையில், விநியோகஸ்தர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை நிலுவையில் உள்ளது.

அதாவது: திருநெல்வேலி ஆனந்த் - 36 லட்சம், திருச்சி சுப்பையா - 1.30 கோடி, மதுரை அழகர்சாமி - 50 லட்சம், கோவை சிதம்பரம் - 2.30 கோடி, சேலம் 7 G சிவா - 1 கோடி ரூபாய் என திருப்பித் தர வேண்டிய பாக்கித் தொகை உள்ளது.

இந்நிலையில், பாக்கியை கொடுத்து திட்டமிட்டபடி ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திட்டமிட்டபடி வருமா என்பதே தியேட்டர் வட்டார கேள்வி.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon