மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார்: விஜய பிரபாகரன்

இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார்: விஜய பிரபாகரன்

தலைமை கூறினால் இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டும், அவர் நலம் பெற வேண்டியும் குன்றத்தூரில் நேற்று (செப்டம்பர் 22) தேமுதிக சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு குன்றத்தூர் திருநாகேஸ்வரம் கோயிலிலிருந்து 508 பால்குடம் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், குன்றத்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனமும் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், “அதிமுகவின் பேனர் விழுந்து உயிரிழப்பு நடந்ததால் பிரச்சினையாகியது. தனியார் வைத்த பேனர் விழுந்திருந்தால் இவ்வளவு சர்ச்சை ஆகியிருக்காது என்றே நினைக்கிறேன். இருப்பினும் பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை அனைத்து அரசியல் கட்சிகளும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் கூறியது அவரது சொந்தக் கருத்து” என்று குறிப்பிட்டார்.

அவரிடம், தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலிலோ அல்லது வரவுள்ள தேர்தல்களிலோ போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேமுதிக தலைமை கூறினால் தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். தலைமை சொல்லுக்குக் கட்டுப்படுவேன். இதில் பயம் என்பதற்கோ, முடியாது என்பதற்கோ இடமில்லை” என்று பதிலளித்தார் விஜய பிரபாகரன்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆக, இரு தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவைச் சேர்ந்த விஜய பிரபாகரன் இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon