மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: அனைத்து மாநிலங்களிலும் திமுக - ஸ்டாலின் போடும் தேசியத் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: அனைத்து மாநிலங்களிலும் திமுக - ஸ்டாலின் போடும் தேசியத் திட்டம்!

மொபைல் டேட்டாவை ஆன் செய்த கொஞ்ச நேரத்தில் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் அண்ணா அறிவாலயம் காட்டியது,

“அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக் குழு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. பின் இடைத் தேர்தல் அறிவிப்புகள் வந்தபிறகு,அதன் காரணமாக பொதுக் குழு தேதி தள்ளி வைக்கப்பட்டு விட்டது. பொதுக் குழுவின் தேதி தள்ளி வைக்கப்பட்டாலும்கூட பொதுக் குழுவை முன்னிட்டு அதில் வைக்கப்பட வேண்டிய தீர்மானங்கள், கட்சி அமைப்பு விதிகளில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஆலோசனைகள் அறிவாலயத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

குறிப்பாக பொதுச் செயலாளர் பதவி குறித்தும் அதன் அதிகாரங்கள் குறித்தும் திமுகவின் மூத்த முன்னோடிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல ஸ்டாலினின் உத்தரவுக்கு இணங்க இன்னொரு முக்கியமான அம்சம் குறித்தும் அறிவாலயத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதாவது திமுகவை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்குவதற்கு, அமைப்பு ரீதியாக கிளைப் பரப்புவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும், தமிழர்கள் வாழும் டெல்லி, மகாராஷ்டிரம் மாநிலங்களிலும், அந்தமானிலும்கூட திமுக அமைப்பு ரீதியாக இருக்கிறது. இதேபோன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் திமுக அமைப்பு தொடங்கப்பட வேண்டும், அந்த அமைப்புக்குச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு அமைப்பு ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்று அமைப்புப் பணிகளைக் கவனிக்கும் நிர்வாகிகளுக்குச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

அதையடுத்து ஏற்கனவே திமுக இருக்கும் மாநிலங்களவைத் தவிர வேறு எந்தெந்த மாநிலங்களில் திமுகவை அமைப்பு ரீதியாகத் தொடங்கலாம் என்பது குறித்தும் இதுபற்றி திமுகவின் அமைப்பு விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமா என்பது குறித்தும் விவாதங்கள் தொடங்கிவிட்டன. இதன்படி தமிழ்நாட்டில் வலுவாக இருக்கும் திமுக, தென்னிந்திய மாநிலங்களில் பெயருக்கு இருப்பது போல் ஒடிசா மற்றும் வடஇந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஏன், காஷ்மீரில்கூட கிளை அமைப்பைத் தொடங்கும் ஆலோசனைகள் அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றன.

பாஜக அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவின் இந்தி மொழி பற்றிய கருத்தை எதிர்த்துக் கடந்த 20ஆம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்தார் ஸ்டாலின். ஆனால் 18ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைத்துப் பேசியதை அடுத்து, போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டார். இதன் காரணமே தலைமைக் கழக நிர்வாகிகளுக்குப் புரியாமல் இருக்கும் நிலையில், இப்போது அனைத்து மாநிலங்களிலும் திமுகவின் அமைப்புகளைத் தொடங்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க நடைபெற்று வரும் ஆலோசனையில் கலந்துகொண்டோரும் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்.

திமுக இப்போது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. தமிழகத்திலிருந்து மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் அடிப்படையில்தான் இந்த இடத்தைப் பெற்றிருக்கிறது திமுக. இதையும் தாண்டி இந்தியா முழுவதும் திமுகவின் சமூக நீதிக் கருத்துகளும், மாநில சுயாட்சிக் கருத்துகளும் சென்று சேர வேண்டும் என்றும் அதற்கான நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகவாவது அனைத்து மாநிலங்களிலும் திமுக கிளை இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கருதுகிறார். ஏற்கெனவே பல மாநிலங்களிலும், ஏன் பல வெளிநாடுகளிலும்கூட திமுக இருக்கிறது. ஆங்காங்கே இருக்கும் தமிழர்களில் திமுக சிந்தனை கொண்டோர் கலைஞர் பிறந்தநாள் விழா, ஸ்டாலின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் அதிகாரபூர்வமற்று இயங்கும் அந்த அமைப்புகளை திமுகவின் அதிகாரபூர்வ அமைப்புகளாக மாற்றினால் என்ன என்பதுதான் ஸ்டாலினின் திட்டம். மேலும், இதன் மூலம் திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்க முடியும் என்றும் ஸ்டாலின் கருதுகிறார் என்கிறார்கள் ஒரு சாரார்.

இன்னொரு சாராரோ, ஏற்கெனவே இந்திரா காந்தி காலத்தில் மத்திய அரசின் நெருக்கடி தாங்க முடியாமல் அதிமுகவின் பெயரை அனைத்திந்திய அண்ணா திமுக என்று மாற்றினார் எம்ஜிஆர். இப்போது திமுக இப்படிச் செய்தால், அமித் ஷாவின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக திமுகவுக்கும் ஒரு தேசிய முகத்தைக் கொடுக்க ஸ்டாலின் திட்டமிடுகிறாரோ என்று விமர்சனங்கள் வரும் என்று ஆலோசனை நடந்தபோது சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அந்த முக்கியமான நிர்வாகி, ‘தலைமை என்ன சொல்லுதோ, அதுக்கு செயல்திட்டம் தயார் செய்து கொடுப்போம். அவ்வளவுதான் நம்ம வேலை’ என்று பதில் அளித்திருக்கிறார்.

திமுகவைப் பல மாநிலங்களிலும் ஆரம்பிப்பதன் மூலம் தேர்தல் ரீதியாக எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் பிற மாநிலங்களில் போட்டியிடுவதிலும் திமுக ஆர்வமாக இல்லை. ஆனாலும் இந்தியாவின் பல மாநிலங்களில் திமுகவின் அமைப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் திடீரென இப்போதைக்கு ஸ்டாலினுக்கு ஏன் என்பதுதான் புரியவில்லை என்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தை கட்சியைக்கூட ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் சமீபத்திய மாதங்களில் சென்று தொடங்கி வைத்துவிட்டு வந்தார் திருமாவளவன். அதுபோல திமுக ஏற்கனவே சில மாநிலங்களில் பரவியிருக்கும் நிலையில், மீதமுள்ள மாநிலங்களிலும் அமைப்பை ஏற்படுத்துவதில் முனைந்திருக்கிறது அக்கட்சி. இதன் மூலம் திமுகவுக்கு தேசியக் கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் சில நிர்வாகிகளுக்கு இருக்கிறது. ஆனாலும் அமைப்பு தொடங்குவதால் மட்டுமே தேசியக் கட்சியாகிவிட முடியாது. இப்போதைக்கு திமுகவின் கொள்கைகள் பிற மாநிலங்களுக்கும் தேவை என்பதாலேயே இந்த மூவ் என்கிறார்கள் அறிவாலய உள் வட்டாரத்தில்” என்ற தகவலுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon