மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

காமராஜர் ஆட்சி நடைமுறை சாத்தியம் அல்ல: காங்கிரஸ்

காமராஜர் ஆட்சி நடைமுறை சாத்தியம் அல்ல: காங்கிரஸ்

நாங்குநேரி இடைத்தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில் மீண்டும் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு நெருடல் போக்கு ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்ததின விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாத யாத்திரை பற்றிய ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 22ஆம் தேதி) நாகர்கோவிலில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சஞ்சய் தத் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். எம்.பி, எம்.எல்.ஏ வாய்ப்பு ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துச் செயல்வீரர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நமது கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் தளபதி ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்” என்று கூறியபோது கூட்ட அரங்கத்திற்குள் சலசலப்புகள் எழுந்தன.

“அப்போ காமராஜர் ஆட்சி என்ன ஆச்சு? காமராஜர் ஆட்சி அமைக்க முடியாதா? ஸ்டாலின் ஆட்சி அமைக்க வேண்டுமா, காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டுமா?” என்றெல்லாம் கூக்குரல்கள் எழுந்தன.

இதைப் புரிந்துகொண்ட சஞ்சய் தத் உடனடியாக இதைச் சமாளிக்கும் வகையில், “என்னை முழுமையாகப் பேசவிடுங்கள். அதற்குள் நீங்களாகவே ஒரு முடிவுக்கு வராதீர்கள். தமிழகத்தில் எங்கே சென்றாலும் நான், காமராஜர் ஆட்சி அமைப்பதே நமது நோக்கமென்று வலியுறுத்தி வருகிறேன். ஆனால், நாம் எதார்த்தத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். இப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்?” என்று கேட்டார். ஏழு பேர் என்று மேடையிலிருந்து பதில் வந்தது.

தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்று கேட்டார் சஞ்சய் தத். 234 பேர் என்று பதில் வந்தது.

”234 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டமன்றத்தில் ஏழு எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு நம்மால் நாளை காமராஜர் ஆட்சி அமைக்க முடியுமா? அது நடைமுறை சாத்தியமா? வெறும் கோஷங்களால் காமராஜர் ஆட்சி அமைத்துவிட முடியாது. முதலில் இந்த ஏழு எம்.எல்.ஏ.க்களை நாம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 70 எம்.எல்.ஏ.க்களாக மாற்றுவோம். அதன்பிறகு படிப்படியாக காமராஜர் ஆட்சி அமைப்போம். இதுதான் நமது திட்டம்” என்று ஒருவழியாகச் சமாளித்துவிட்டு உட்கார்ந்தார் சஞ்சய் தத்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon