மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

‘ஹவ்டி மோடி’: ஒரே நிலைப்பாடு கொண்ட மோடி - டிரம்ப்

‘ஹவ்டி மோடி’: ஒரே நிலைப்பாடு கொண்ட மோடி - டிரம்ப்

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி ஹூஸ்டனில் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஹுஸ்டனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் 50,000 இந்தியர்கள் முன்னிலையில் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் மூன்று மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மோடி பேசும்போது, இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய வரலாறு படைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி கூறியதாவது, “குட் மார்னிங் ஹூஸ்டன், அமெரிக்கா, நண்பர்களே, டிரம்புக்கு அறிமுகம் தேவையில்லை. உலக அரசியல் தீர்மானிப்பவராக இருக்கிறார் டிரம்ப். ஒவ்வொரு வீட்டில் உள்ளவருக்கும் தெரிந்தவர். அவரை மேடைக்கு அழைப்பதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் டிரம்பைச் சந்திக்கும்போது உற்சாகம் வருகிறது. நட்பை பாராட்டக்கூடியவராக இருக்கிறார் டிரம்ப். அமெரிக்கப் பொருளாதாரத்தை மீண்டும் வலிமைமிக்கவராக மாற்றியவர் டிரம்ப்.

வெள்ளை மாளிகைக்கு இந்தியா உண்மையான நட்புடன் இருந்து வருகிறது. அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா என டிரம்ப் கூறினார். இரு நாடுகளுக்கான நட்புறவு உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டு இருப்பது சிறப்புக்குரியது. இந்த சந்திப்பு மூலம் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு என்னை அவரது குடும்பத்துக்கு அறிமுகம் செய்தார் டிரம்ப். இப்போது நான் எனது குடும்பத்தை (இந்தியர்களை) அவருக்கு அறிமுகம் செய்கிறேன்.

“எங்களைப் பொறுத்தவரை, வணிகத்தை எளிதாக்குவது போலவே வாழ்க்கையை எளிமையாக்குது முக்கியம். ஆனால், அதற்குச் சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது முக்கியம். சாதாரண மக்கள் அதிகாரம் பெறும்போதுதான் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் தேசம் முன்னேறுகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிக்காகவே பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் சிறப்பு அந்தஸ்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள். அது தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இப்போது அங்குள்ள மக்களுக்குச் சம உரிமை கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித்துகள் உட்பட அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு அரசியல் சாசன பிரிவு 370ஐ ரத்து செய்தது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தங்கள் நாட்டை முறையாக நிர்வகிக்க தெரியாதவர்கள். இவர்கள்தான் தீவிரவாதத்தைப் பாதுகாத்து வளர்க்கிறார்கள். முழு உலகமும் அவர்களை நன்கு அறியும்.

அமெரிக்காவில் 9/11 அல்லது மும்பையில் 26/11 ஆக இருந்தாலும், சதிகாரர்கள் எங்கே இருக்கிறார்கள்? தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் எதிராக ஒரு தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது. இந்த சண்டையில், அதிபர் டிரம்ப் உறுதியாக நிற்கிறார் என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன்” எனக் கூறினார் மோடி.

மேலும், மோடி தன்னுடைய உரையின்போது, “நீங்கள் ‘ஹவ்டி மோடி’ (நலமா மோடி!) எனக் கேட்கும்போது, இந்தியா மிக நலமாக இருக்கிறது எனச் சொல்லத் தோன்றுகிறது” எனக் கூறினார்.

அதன் பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார், “மோடியுடன் இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எனது அருமை நண்பர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களுக்குச் சிறப்பான பணியை மோடி செய்து வருகிறார். இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. இந்திய மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து இருக்கிறார். அடுத்த கட்டத்துக்கு இந்திய மக்களை மோடி அழைத்துச்செல்கிறார்.

ஜனநாயகத்தின் மீது இரு நாடுகளும் நம்பிக்கை வைத்து உள்ளது. 60 கோடி மக்கள் பங்கேற்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றுள்ளார். இந்திய மக்கள் ஒருமனதாக மோடியைத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் ஆவார்கள். அவர்கள் அமெரிக்கர்களாக இங்கு வசிப்பதில் பெருமையடைகிறோம். பாதுகாப்புத் துறையிலும் இரண்டு நாடுகள் இடையிலான நட்பு உலக அளவில் பெரிதாக மாறியுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். இரண்டு நாடுகளும் இந்த கருத்தில் ஒரே நிலைப்பாடு கொண்டுள்ளது.

இரு நாடுகளும் தங்கள் எல்லையைப் பாதுகாக்க வேண்டும்.எல்லை பாதுகாப்பு இரண்டு நாட்டுக்கும் மிக மிக முக்கியமானது ஆகும். அமெரிக்காவின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல்தான் இந்தியாவும் தனது எல்லைகளைப் பலப்படுத்தி உள்ளது” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை குறித்த நிலைப்பாட்டிலும், இந்தியா - காஷ்மீர் எல்லை குறித்த நிலைப்பாட்டிலும், இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய நிலைப்பாட்டிலும் இரு நாட்டு தலைவர்களும் ஒருமித்த கருத்தை இந்த ஹவ்டி மோடி அரங்கில் வெளிப்படுத்தினர்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon