மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

டி20: 9 விக். வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

டி20: 9 விக். வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டி, மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை, எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டாம் டி20 போட்டியில் ஆடிய அதே அணியே ஃபைனலிலும் களமிறங்கியது. தென்னாப்பிரிக்க அணியில் நோர்ஜே நீக்கப்பட்டு, இடக்கை வேகப் பந்துவீச்சாளர் ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ரோஹித் சர்மா, தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 9 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா, பேரான் ஹென்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 25 பந்தில் 36 ரன்கள் குவித்தார், அவர் ஆட்டமிழந்த பின், இந்திய அணி சரிவை சந்தித்தது. கோலி 9, ரிஷப் பண்ட் 19, ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் வந்த இந்திய வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். க்ரூனால் பண்டியா 4, ஜடேஜா 19, சுந்தர் 4 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 14 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார். இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின்னர் வெற்றிக்கு 135 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் வேகத்துக்கு நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் பதில் அளித்தனர் தென்னாப்பிரிக்க வீரர்கள். துவக்க வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் டி காக் அசத்தலாக ஆடி 52 பந்துகளில் 79 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 5 சிக்ஸர்கள் அடித்து அதிரடி ஆட்டம் ஆடி தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். ஒன் - டவுன் வந்த பவுமா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

16.5 ஓவர்களில் இந்தியா நிர்ணயித்த 135 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது தென்னாப்பிரிக்கா. மொத்தம் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 1-1 என சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon