மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 நவ 2019

களமிறங்கும் வைகோ மகன்!

களமிறங்கும் வைகோ மகன்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் வைகோ மகன் துரை வையாபுரி

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக மதிமுகவினர் சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம் என்று பல பகுதிகளிலும் மதிமுக கொடிகளையும்,பதாகைகளையும் நிறுவியிருந்தனர். இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது, அவர்களுக்கும் மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின்பேரில், மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை கைது செய்தனர். தற்போது அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி.

முதலில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், இளைஞரணி துணை அமைப்பாளர் கராத்தே பாபு ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்ற துரை வையாபுரி, அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாநில மாணவரணி துணை செயலாளர் அம்பத்தூர் முகவை சங்கர் இல்லத்துக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சிச் செயலாளர் சீனுவின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் குடும்பத்துக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

வழக்கமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோதான், இதுபோன்று கட்சியினரின் வீடுகளுக்குச் சென்று விசாரிப்பார். உடல்நலக் குறைவு காரணமாகவும், புத்துணர்வுக்காகவும் தற்போது கேரள மாநிலம் கோட்டக்கல்லில் உள்ள ஆர்ய வைத்தியசாலையில் வைகோ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், தான் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் தனது மகன் துரை வையாபுரியை அனுப்பிவைக்கிறார் வைகோ. இதைப் புகைப்படம் எடுத்து மதிமுகவினர் உற்சாகமாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

துரை வையாபுரிக்கு மதிமுகவில் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கட்சிக்குள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், துரை வையாபுரிக்காகத் தனது பதவியையும் விட்டுக் கொடுக்கத் தயார் என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார். அதுபோலவே பல இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துரை வையாபுரி முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். மதிமுகவின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் துரை வையாபுரியின் பெயரும் முளைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் இல்லங்களுக்கு துரை வையாபுரி சென்றுள்ளது மதிமுகவினரிடயே கவனம் பெற்றுள்ளது.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon